IPL 2026: சிஎஸ்கே அணியிலிருந்து ஆயுஷ் மாத்ரே விலகல்.. காயம் காரணமாக பங்கேற்க மாட்டார் என அறிவிப்பு
சென்னை: நடப்பு ஐபிஎல் 2026 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மிகப் பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தொடக்கத்தில் சிறப்பான ஃபார்மில் இருந்த அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான ஆயுஷ் மாத்ரே, காயம் காரணமாக மீதமுள்ள போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். மும்பையைச் சேர்ந்த வலதுகை ஆட்டக்காரரானஆயுஷ் மாத்ரே விலகல் சிஎஸ்கே ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடப்பு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மூன்றாம் நிலை வீரராக களமிறங்கிய ஆயுஷ் மாத்ரே ஏப்ரல் 18 அன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் பேட்டிங் செய்தபோது தசைப்பிடிப்பு காயத்தால் பாதிக்கப்பட்டார். இதனால், அவர் தொடரிலிருந்து விலகியுள்ளதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களது அதிகாரப்பூர்வ X சமூக வலைத்தளப் பக்கத்தில் உறுதி செய்துள்ளது.

சிஎஸ்கே வெளியிட்ட அறிக்கையில், "ஏப்ரல் 18 அன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் பேட்டிங் செய்தபோது ஏற்பட்ட இடது தொடை தசைப்பிடிப்பு காயம் காரணமாக ஆயுஷ் மாத்ரே ஐபிஎல் 2026ன் மீதமுள்ள போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். ஆயுஷின் காயம் குணமடைய 6-12 வாரங்கள் ஓய்வு தேவைப்படும். ஆயுஷ் விரைவில் குணமடைய வாழ்த்துகிறோம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆயுஷ் மாத்ரே வெளியேற்றம் அணிக்கு பெரும் இழப்பாகப் பார்க்கப்படுகிறது. நடப்பு சீசனில் அவர் விளையாடிய முதல் ஆறு போட்டிகளில், இரண்டு அரை சதங்கள் உட்பட மொத்தம் 201 ரன்களைக் குவித்து சிறப்பான ஃபார்மில் இருந்தார். குறிப்பாக,சென்னை எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக 73 ரன்களையும், டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக 59 ரன்களையும் எடுத்து வலுவான பங்களிப்பைச் செய்திருந்தார்.
ஆயுஷ் மாத்ரேவின் இல்லாத நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 3ஆம் நிலை ஆட்டக்காரராக உர்வில் படேல் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே நாதன் எல்லீஸ், தோனி, கலீல் அகமது போன்ற வீரர்கள் காயமடைந்த நிலையில், தற்போது அந்த பட்டியலில் ஆயுஷ் மாத்ரேவும் இணைந்துள்ளார்.


Click it and Unblock the Notifications