CSK: எல்லா காதல் கதைக்கும் ஒரு முடிவு உண்டு.. பிளெமிங் - தோனி பிரியும் நேரம்.. வாகன் பேச்சு
சென்னை: 2026 ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான் விளையாடிய முதல் 3 போட்டிகளிலும் தோல்வியடைந்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இந்தத் தொடர் தோல்விகளால் சிஎஸ்கே ரசிகர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ள நிலையில், அந்த அணியின் நீண்ட கால பயிற்சியாளரான ஸ்டீபன் பிளெமிங்கின் எதிர்காலம் குறித்து இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் பரபரப்பு கருத்தை வெளியிட்டுள்ளார்.
கடந்த 2009 முதல் சிஎஸ்கே அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருக்கும் பிளெமிங், தோனியுடன் இணைந்து ஐபிஎல் வரலாற்றின் சிறந்த அணியை உருவாக்கி இருக்கிறார். இவர்களின் கூட்டணியில் சிஎஸ்கே 5 முறை ஐபிஎல் கோப்பைகளையும், 2 முறை சாம்பியன்ஸ் லீக் டி20 கோப்பைகளையும் வென்றுள்ளது. ஆனால், தற்போது அந்த சகாப்தம் முடிவுக்கு வரும் காலம் நெருங்கிவிட்டதாக வாகன் கூறி இருக்கிறார்.

இது குறித்துப் பேசிய வாகன், "சிஎஸ்கே-வின் தோல்விகளுக்குப் பயிற்சியாளரைக் குற்றம் சொல்ல முடியாது. சஞ்சு சாம்சன், ருதுராஜ் கெய்க்வாட் போன்ற முன்னணி வீரர்கள் ரன் குவிக்கத் தவறியதே முக்கியக் காரணம். ஆர்சிபி-க்கு எதிரான போட்டியில் 251 ரன்கள் என்ற இலக்கை விரட்டுவது டி20 கிரிக்கெட்டில் அவ்வளவு எளிதான காரியம் அல்ல. சிஎஸ்கே-வின் பேட்டிங்கை விடப் பந்துவீச்சு தான் தற்போது மிகப்பெரிய கவலையாக உள்ளது" எனத் தெரிவித்தார்.
மேலும் அவர் பேசுகையில், "அனைத்து அழகான காதல் கதைகளுக்கும் ஒரு முடிவு உண்டு. அதுபோலவே தோனி - பிளெமிங் கூட்டணியும் எப்போதும் நீடிக்க முடியாது. சிஎஸ்கே நிர்வாகம் பிளெமிங்கை நீக்காது, மாறாக அவரே 20 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு அணியுடன் பயணித்த பிறகு, இதுவே விலகுவதற்கான சரியான நேரம் எனத் தானாக முன்வந்து முடிவு செய்யலாம்" என்று வாகன் கூறியுள்ளார்.
2008-ல் வீரராகத் தொடங்கி, 2009 முதல் பயிற்சியாளராகத் தொடரும் பிளெமிங், சிஎஸ்கே-வை 10 முறை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்றுள்ளார். இடையில் 2 ஆண்டுகள் புனே அணிக்கும் பயிற்சியாளராக இருந்தார். தற்போது சேப்பாக்கம் மைதானத்தின் ஆடுகளம் பேட்டிங்கிற்குச் சாதகமாக மாற்றப்பட்டிருப்பதும் சிஎஸ்கே பந்துவீச்சாளர்களுக்குப் பின்னடைவாக உள்ளதாக வாகன் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த சீசனில் சிஎஸ்கே மீண்டு வராவிட்டால், பிளெமிங்கின் நீண்ட காலப் பயணம் முடிவுக்கு வர அதிக வாய்ப்புள்ளதாக பலரும் கருத்து கூறத் துவங்கி இருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications