IPL 2026: GT-க்கு எதிராக சிஎஸ்கே வெல்லுமா? போட்டியின் முடிவே இவர் ஒருவர் கையில் தான் இருக்கு
சென்னை: ஐபிஎல் 2026 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இன்று மோதவுள்ளன. இரு அணிகளும் தலா ஏழு போட்டிகளில் விளையாடி, மூன்று வெற்றிகள் மற்றும் நான்கு தோல்விகளுடன் சமமான புள்ளிகளைப் பெற்றுள்ளன. இந்தச் சூழலில், இன்றைய போட்டி இரு அணிகளுக்கும் மிக முக்கியமானது. இந்தப் போட்டியில் சிஎஸ்கே அணியின் சுழற்பந்து வீச்சாளர் அக்கேல் ஹொசைன் ஒரு முக்கியமான துருப்புச் சீட்டாக பார்க்கப்படுகிறார்.
டி20 கிரிக்கெட்டில் அக்கேல் ஹொசைன் குஜராத் டைட்டன்ஸ் வீரர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாகத் திகழ்கிறார் என்பது புள்ளிவிவரங்கள் மூலம் தெளிவாகிறது. குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில்லுக்கு எதிராக ஹொசைனின் ஆதிக்கம் சிறப்பாக உள்ளது. டி20 கிரிக்கெட்டில், கில்லை எதிர்கொண்ட 31 பந்துகளில், ஹொசைன் அவரை இரண்டு முறை ஆட்டமிழக்கச் செய்துள்ளார்.

அதே நேரத்தில், வெறும் 29 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்துள்ளார். இது ஹொசைன் எவ்வளவு கட்டுக்கோப்பாகப் பந்துவீசுகிறார் என்பதைக் காட்டுகிறது. இதைவிட ஆச்சரியமான புள்ளிவிவரம் ஜேசன் ஹோல்டருக்கு எதிரானது தான். ஹொசைன் பந்துவீச்சில் ஹோல்டர் தடுமாறி இருப்பது தெரியவந்துள்ளது.. ஹோல்டருக்கு எதிராக ஹொசைன் வீசிய 13 பந்துகளில், அவர் வெறும் 2 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். அதிலும் குறிப்பாக, நான்கு முறை ஹோல்டர் ஹொசைனிடம் ஆட்டமிழந்துள்ளார்.
குஜராத் டைட்டன்ஸ் அணியின் மிடில் ஆர்டர் (middle-order) ஏற்கனவே பலவீனமாக உள்ளதாக விமர்சிக்கப்படுகிறது. இத்தகைய சூழலில், சுப்மன் கில் மற்றும் ஜேசன் ஹோல்டர் போன்ற முக்கிய வீரர்கள், ஹொசைனின் பந்துவீச்சை எதிர்கொள்வது அவர்களுக்குப் பெரும் சவாலாக இருக்கும்.
ஹொசைன் புதிய பந்தைச் சிறப்பாகச் சுழற்றக் கூடியவர் மட்டுமல்ல, ஐபிஎல் போட்டிகளில் தனது மாறுபட்ட பந்துவீச்சால் விக்கெட்டுகளை வீழ்த்தி வருகிறார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக அவர் காட்டிய துல்லியம், இன்று குஜராத் அணிக்கு எதிராகத் தொடர்ந்தால், அது சிஎஸ்கே அணிக்கு மிகப்பெரிய வெற்றியைத் தேடித்தரும்.
சென்னை மைதானத்தில் நடைபெறவுள்ள இந்தப் போட்டியில், ஹொசைன் தனது இந்தச் சாதகமான புள்ளிவிவரங்களை மீண்டும் ஒருமுறை நிரூபித்து, குஜராத் டைட்டன்ஸ் அணியின் பேட்டிங் வரிசையைச் சிதைப்பாரா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications