IPL 2026: வெறும் 39 ரன் அடித்தவருக்கு ஆட்டநாயகன் விருது.. அரைசதம் அடித்தவர்களுக்கு ஒண்ணுமே இல்லை!
சென்னை: 2026 ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் 2 வீரர்கள் அரைசதம் அடித்திருந்தும், வெறும் 39 ரன்கள் எடுத்த வீரருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதன் பின்னணியில் உள்ள சுவாரசியமான காரணத்தை இங்கே விரிவாகப் பார்ப்போம்.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் குவித்தது. சிஎஸ்கே அணியில் இளம் வீரர் ஆயுஷ் மத்ரே அதிரடியாக விளையாடி 43 பந்துகளில் 73 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதேபோல் சிவம் துபே 27 பந்துகளில் 45 ரன்கள் சேர்த்தார்.

இதனைத் தொடர்ந்து 210 ரன்கள் என்ற கடினமான இலக்கை துரத்திய பஞ்சாப் கிங்ஸ் அணியில், அதிகபட்சமாக அந்த அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 29 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். அவருக்கு அடுத்தபடியாக பிரப்சிம்ரன் சிங் 34 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இப்படி 4 வீரர்கள் 40 ரன்களுக்கு மேல் எடுத்திருந்த போதிலும், பஞ்சாப் அணியின் தொடக்க வீரர் பிரியன்ஷ் ஆர்யாவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
பிரியன்ஷ் ஆர்யா எடுத்தது வெறும் 39 ரன்கள் தான் என்றாலும், அவர் அதை வெறும் 11 பந்துகளில் எடுத்தார் என்பதுதான் இங்கு கவனிக்கப்பட வேண்டிய விஷயம். இதில் 3 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். அவரது ஸ்ட்ரைக் ரேட் 354.55 என்ற மலைக்க வைக்கும் அளவில் இருந்தது.
210 ரன்கள் என்ற பிரம்மாண்ட இலக்கை சேஸிங் செய்யும்போது, ஆரம்பத்திலேயே இத்தகைய அதிரடி ஆட்டம் அந்த அணிக்கு மிகப்பெரிய உத்வேகத்தைத் தந்தது. அரைசதம் அடித்த ஆயுஷ் மத்ரே அல்லது ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரை விட பிரியன்ஷ் ஆர்யாவின் தாக்கம் இப்போட்டியில் அதிகமாக இருந்தது. பெரிய இலக்கை துரத்தும்போது ஏற்படும் அழுத்தத்தை இவரது 11 பந்து அதிரடி தவிடுபொடியாக்கியது.
பிரியன்ஷ் ஆர்யாவின் இந்த அதிரடித் தொடக்கத்தால் தான் பஞ்சாப் அணி 18.4 ஓவர்களில் இலக்கை எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதைக் கருத்தில் கொண்டே அரைசதம் அடித்த வீரர்களைத் தாண்டி, குறைந்த ரன்கள் எடுத்திருந்தாலும் ஆட்டத்தின் போக்கை மாற்றிய பிரியன்ஷ் ஆர்யாவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இதன் மூலம் சிஎஸ்கே அணி தனது சொந்த மண்ணில் அதிர்ச்சி தோல்வியைத் தழுவியது.


Click it and Unblock the Notifications