IPL 2026: “இப்படிதான் சிஎஸ்கே-வை வீழ்த்தினோம்..” ஆர்சிபி கேப்டன் ரஜத் படிதார் சொன்ன ரகசியம்
பெங்களூர்: 2026 ஐபிஎல் தொடரின் 11-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 43 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பிரம்மாண்ட வெற்றி பெற்றது. ஆர்சிபி நிர்ணயித்த 251 ரன்கள் என்ற இமாலய இலக்கை எட்ட முடியாமல் சிஎஸ்கே திணறியது. இந்த வெற்றிக்குப் பிறகு பேசிய ஆர்சிபி கேப்டன் ரஜத் படிதார், தனது அணியின் வெற்றிக்குக் காரணமான வீரர்கள் குறித்து மனம் திறந்து பேசினார்.
வெற்றி குறித்துப் பேசிய ரஜத் படிதார், "இது ஒரு சிறந்த உணர்வு. அணிக்குள் ஒரு திருப்தியான சூழல் நிலவுகிறது. ஆட்டத்தின் தொடக்கத்தில் பந்து சற்று நின்று வந்தது. ஆனால் பிலிப் சால்ட் (46) மற்றும் விராட் பாய் (28) ஆடிய விதம் மிகச்சிறப்பானது. அவர்கள் அமைத்துக் கொடுத்த அந்த அடித்தளத்திற்குப் பிறகு, நான்-ஸ்ட்ரைக்கர் முனையிலிருந்தும், டக் அவுட்டிலிருந்தும் எங்கள் வீரர்கள் அடித்த சிக்ஸர்களை நான் மிகவும் ரசித்தேன். நான் களத்தில் இருக்கும் வரை பந்துவீச்சாளர்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்ற தெளிவான மனநிலையுடன் இருந்தேன்" என்றார்.

அதிரடி வீரர் டிம் டேவிட் குறித்துப் பேசிய அவர், "அவர் ஒரு ஸ்பெஷலிஸ்ட் வீரர். நான் பார்த்ததிலேயே மிகச்சிறந்த பினிஷர் அவர் தான். ஆட்டம் முழுவதும் மிகவும் சீராக விளையாடும் டிம் டேவிட்டின் பேட்டிங்கை நான் ரசித்துப் பார்த்தேன்" எனப் புகழ்ந்தார். இப்போட்டியில் டிம் டேவிட் வெறும் 25 பந்துகளில் 70 ரன்கள் விளாசி ஆர்சிபி 250 ரன்களை எட்ட உதவினார்.
பந்துவீச்சு வியூகம் குறித்து விளக்கிய படிதார், "ஜேக்கப் டஃபி ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை (ருதுராஜ், சஞ்சு சாம்சன்) வீழ்த்தியது எங்களை வலுவான நிலையில் அமர வைத்தது. நான் எப்போதெல்லாம் அழுத்தத்தில் இருக்கிறேனோ, அப்போதெல்லாம் க்ருணால் பாண்டியாவை தான் தேடுவேன். அவர் எங்கே இருக்கிறார் என்று பார்ப்பேன். அவர் மீது எனக்கு அவ்வளவு நம்பிக்கை இருக்கிறது. இக்கட்டான சூழலில் அவர் கொடுத்த விக்கெட்டுகள் வெற்றிக்கு வழிவகுத்தன. அதேபோல் சுயஷ் சர்மா வீசிய அந்த 4 ஓவர்கள் (1/21) மிகச்சிறந்தவை" என்றார்.
இறுதி ஓவர்கள் குறித்துப் பேசுகையில், "டெத் ஓவர்களில் புவனேஷ்வர் குமார் மற்றும் அபிநந்தன் சிங் வீசிய யார்க்கர்கள் பார்க்கவே மிக அழகாக இருந்தது. இடையில் ரொமாரியோ ஷெப்பர்ட் பந்து வீசிய அந்த ஒரு ஓவர் கூட ஒரு சிறந்த முயற்சி. அணியில் உள்ள அனைவரும் இப்போது நல்ல மனநிலையில் உள்ளனர். அடுத்த போட்டிக்காக ஆவலுடன் காத்திருக்கிறோம்" என ரஜத் படிதார் மகிழ்ச்சியுடன் கூறினார்.


Click it and Unblock the Notifications