IPL 2026: 2 ஓவரில் 12 ரன் கொடுத்த சிஎஸ்கே பவுலரை கதறவிட்ட டேவிட்.. ஒரே ஓவரில் 4 சிக்ஸ், ஒரு போர்
பெங்களூர்: சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான லீக் போட்டியில், ஆஸ்திரேலிய அதிரடி வீரர் டிம் டேவிட் ஆடிய ஆட்டம் சிஎஸ்கே பந்துவீச்சாளர்களை நிலைகுலையச் செய்தது. குறிப்பாக, அந்தப் போட்டியில் சிறப்பாகப் பந்துவீசி வந்த சிஎஸ்கே பவுலரின் ஓவரில் 30 ரன்களை விளாசி ஆர்சிபி அணியின் ஸ்கோரை 250-க்கு கொண்டு சென்றார்.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, தொடக்கம் முதலே அதிரடி காட்டியது. இருப்பினும், ஒரு கட்டத்தில் ஆர்சிபி அணி 220 ரன்கள் வரை மட்டுமே எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி 5 ஓவர்களில் டிம் டேவிட் மற்றும் கேப்டன் ரஜத் படிதார் இணைந்து சிக்ஸர் மழையைப் பொழிந்தனர். இதில் டிம் டேவிட்டின் அதிரடி சிஎஸ்கே அணிக்கு மிகப்பெரிய தலைவலியை ஏற்படுத்தியது.

சிஎஸ்கே அணியில் அதுவரை அதிக ரன்களை விட்டுக்கொடுக்காமல் கட்டுக்கோப்பாகப் பந்துவீசிய ஒரே வீரர் ஜேமி ஓவர்டன் மட்டுமே. அவர் தனது முதல் 2 ஓவர்களில் வெறும் 12 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியிருந்தார். இதனால் கடைசி கட்டத்தில் ரன் வேகத்தைக் கட்டுப்படுத்துவார் என்ற நம்பிக்கையில் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் அவருக்கு 19-வது ஓவரை வழங்கினார்.
ஆனால், அந்த ஓவரில் டிம் டேவிட் விஸ்வரூபம் எடுத்தார். ஜேமி ஓவர்டன் வீசிய பந்துகளை மைதானத்தின் நாலாபுறமும் சிதறடித்த டிம் டேவிட், அந்த ஒரே ஓவரில் 4 இமாலய சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரி உட்பட 30 ரன்களை வாரிக்குவித்தார். அதுவரை சிக்கனமாகப் பந்துவீசிய ஓவர்டனின் பந்துவீச்சையே இந்த ஒரே ஓவர் மாற்றியமைத்தது.
டிம் டேவிட்டின் இந்த மிரட்டலான ஆட்டத்தால் ஆர்சிபி அணி 20 ஓவர்கள் முடிவில் 250 ரன்கள் என்ற இமாலய ஸ்கோரை எட்டியது. டிம் டேவிட் வெறும் 25 பந்துகளில் 70 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 251 ரன்கள் என்ற கடினமான இலக்கை விரட்டிய சிஎஸ்கே அணி, சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில் 19.4 ஓவர்களில் 207 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது.


Click it and Unblock the Notifications