பெங்களூர்: 2026 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதிய போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இந்த சீசனில் இரு அணிகளும் மோதும் ஒரே போட்டி இது என்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணிக்கு விராட் கோலி மற்றும் பிலிப் சால்ட் ஜோடி தொடக்க வீரர்களாகக் களம் இறங்கினர். முதல் 3 ஓவர்கள் வரை அதிரடி வீரர்களான இருவரும் மிகுந்த நிதானத்தைக் கடைபிடித்தனர். ஒரு பெரிய இன்னிங்ஸிற்கு இருவரும் தயாராவது போலத் தெரிந்தது.
ஆட்டத்தின் 4-வது ஓவரை மேட் ஹென்றி வீசினார். அந்த ஓவரில் விராட் கோலி தனது அதிரடியைத் தொடங்கினார். ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு ஃபோர் அடித்தார். அந்த ஓவரில் மட்டும் ஆர்சிபி அணி 16 ரன்களை குவித்தது. 10 பந்துகளில் 9 ரன்கள் எடுத்திருந்த கோலி, அந்த ஓவருக்குப் பிறகு 15 பந்துகளில் 24 ரன்கள் எடுத்திருந்தார். மைதானம் முழுவதும் கோலியின் பெயரால் அதிரத் தொடங்கியது.

5-வது ஓவரை வீச இளம் வீரர் அன்சுல் கம்போஜ் அழைக்கப்பட்டார். அந்த ஓவரின் 2-வது பந்தை கோலி பவுண்டரிக்கு விரட்டினார். அடுத்த பந்திலும் அதே போன்ற ஒரு ஷாட்டை ஆட நினைத்த கோலி, ஆக்ரோஷமாக கிரீஸை விட்டு இறங்கி வந்து அடிக்க முயன்றார். ஆனால், கோலியின் வேகத்தைக் கணித்த அன்சுல் கம்போஜ், பந்தை சற்று கடினமான லெந்த்தில் வீசினார்.
இதனால் பந்து எதிர்பார்த்ததை விடக் கூடுதலாக பவுன்ஸ் ஆனது. பந்து வரும் திசையைச் சரியாகக் கணிக்காத கோலி, அவசரமாக ஆடிய புல் ஷாட் தவறாக அமைந்து பந்து உயரே சென்றது. லாங் ஆன் திசையில் நின்றிருந்த சிவம் துபே ஓடி வந்து அந்த கேட்ச்சை கச்சிதமாகப் பிடித்தார். இதன் மூலம் 18 பந்துகளில் 28 ரன்கள் எடுத்த நிலையில் விராட் கோலி ஆட்டமிழந்தார்.

ஆபத்தான வீரரான கோலியை அன்சுல் கம்போஜ் விரைவில் வீழ்த்தியது ஆர்சிபி ரசிகர்களுக்கு அதிர்ச்சியாகவும், சிஎஸ்கே ரசிகர்களுக்கு மிகப்பெரிய உற்சாகமாகவும் அமைந்தது. இருப்பினும், ஆர்சிபி தனது ரன் வேகத்தைக் குறைக்கவில்லை. ஏழாவது ஓவரில் மீண்டும் அன்சுல் கம்போஜ் பந்துவீச வந்தபோது, மற்றொரு தொடக்க வீரரான பிலிப் சால்ட் அவரை ஒரு சிக்ஸர் மற்றும் ஃபோர் விளாசி அந்த ஓவரில் 15 ரன்களைச் சேர்த்தார். கோலி விக்கெட் விழுந்தாலும் ஆர்சிபி அணி ரன் குவிப்பதில் தொடர்ந்து முனைப்பு காட்டியது.