IPL 2026: பெங்களூரு மைதானத்தை சிஎஸ்கே ரசிகர்கள் ஆக்கிரமித்து விடுவார்கள்.. எங்களை விட மாட்டாங்க- விராட் கோலி
பெங்களூரு: ஐபிஎல் 2026 சீசனில் சிஎஸ்கேக்கு எதிராக ஆர்சிபி அணி மோதும் ஆட்டம் எப்போதுமே விறுவிறுப்பான ஆட்டமாக தான் இருக்கும் என்று நட்சத்திர வீரர் விராட் கோலி தெரிவித்துள்ளார். இதற்கு காரணம், எம். சின்னசாமி மைதானத்திற்கு வெளியூர்களில் இருந்து அதிக எண்ணிக்கையில் திரண்டு வரும் CSK ரசிகர்கள், ஒரு முழு பகுதியையும் ஆக்கிரமித்துக்கொள்வதே இந்த தீவிர போட்டிக்கு வித்திடுகிறது என்றார்.
RCB மற்றும் CSK அணிகள் ஐபிஎல் வரலாற்றில் மிக நீண்டகால போட்டி அணியாக உள்ளது. இரு அணிகளும் இதுவரை 35 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் CSK 21-ல் வென்றுள்ளது. RCB 13 வெற்றிகளைப் பெற்றுள்ளது.

சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற 10 ஆட்டங்களில், RCB ஐந்து முறையும், CSK நான்கு முறையும் வெற்றி பெற்றுள்ளன. 2025 சீசனில் RCB கோப்பையை வென்ற வழியில், சின்னசாமியில் CSK-வை இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய மறக்க முடியாத வெற்றியும் இதில் அடங்கும்.
இது குறித்து பேசிய கோலி, "வரலாற்று ரீதியாக நாம் மிகவும் விறுவிறுப்பான ஆட்டங்களில் மோதிய ஒரு அணி, பெங்களூருவில் CSK-வுடன் விளையாடும்போதுதான்," என்று கோலி குறிப்பிட்டார். "சென்னையில், அனைத்து ரசிகர்களும் CSK-வுக்குதான் ஆதரவு. ஆனால் பெங்களூருவில், சென்னை ரசிகர்களும் உள்ளதால் ஒருவித பதற்றம் நிலவுகிறது."
"அவர்களின் மைதானத்தில், எல்லா இடங்களிலும் CSK ரசிகர்கள் மட்டுமே இருப்பார்கள். பெங்களூருவில் மக்கள் 'வாருங்கள், ஆட்டத்தைப் பாருங்கள்' என்று வரவேற்கிறார்கள். ஆனால் சென்னையில் 'உங்களை உள்ளே விடமாட்டோம்' என்பது போல எல்லாம் மஞ்சள் மயமாக இருக்கும். எங்கள் ரசிகர்கள் அங்கு அவ்வளவாகச் செல்வதில்லை," என்றார்.
"CSK ரசிகர்கள் மறுபுறம், பெருமளவில் இங்கு பயணிக்கிறார்கள். அவர்கள் டிக்கெட்டுகளை முன்கூட்டியே வாங்கி, மைதானத்தின் ஒரு முழு பகுதியையும் ஆக்கிரமித்து விடுகிறார்கள். இது தனித்துவமான சூழ்நிலையையும், ஆட்டத்தின் தீவிரத்தையும் உருவாக்குகிறது," என்றும் விராட் கோலி விளக்கினார்.
நடப்பு ஆண்டில் RCB சிறப்பான ஃபார்முடன் CSK-வை எதிர்கொள்கிறது.சின்னசாமியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை வீழ்த்தியுள்ளது. அதேசமயம், CSK இந்த சீசனின் முதல் இரண்டு போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளிடம் தோல்வியைத் தழுவியுள்ளது.


Click it and Unblock the Notifications