IPL 2026: சிஎஸ்கே அணிக்கு வேட்டு வைப்பதே கேப்டன் ருதுராஜ் தான்.. ரசிகர்கள் கடும் அதிருப்தி
சென்னை: 2026 ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான முக்கியமான போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ஆடிய மிக மந்தமான ஆட்டம் அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. மற்ற பேட்ஸ்மேன்கள் அதிரடியாக ரன் குவிக்க முயன்ற நிலையில், கேப்டனே 'ஆமை' வேகத்தில் பேட்டிங் செய்தது சிஎஸ்கே ரசிகர்களைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரராகக் களம் இறங்கிய சஞ்சு சாம்சன் 13 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து அதிரடி காட்டினார். அவரைத் தொடர்ந்து வந்த உர்வில் படேல் 8 பந்துகளில் 13 ரன்களும், கார்த்திக் சர்மா 19 பந்துகளில் 32 ரன்களும் சேர்த்தனர். இவர்கள் அனைவரும் 150-க்கும் மேலான ஸ்டிரைக் ரேட்டில் ரன் குவிக்க, மறுபுறம் நங்கூரம் பாய்ச்சியது போல நின்ற கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ரன் எடுக்க முடியாமல் திணறினார்.

பவர் பிளே சொதப்பல்
சிஎஸ்கே அணி முதல் 3 ஓவர்களில் 43 ரன்கள் குவித்து மிரட்டியது. ஆனால், சஞ்சு சாம்சன் ஆட்டமிழந்த பிறகு அடுத்த 3 ஓவர்களில் சிஎஸ்கே அணியால் வெறும் 14 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இந்த 3 ஓவர்களிலும் ருதுராஜ் கெய்க்வாட் தான் அதிக பந்துகளைச் சந்தித்தார். ஒட்டுமொத்தமாக 21 பந்துகளைச் சந்தித்த அவர், வெறும் 15 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். அவரது ஸ்டிரைக் ரேட் வெறும் 71.43 மட்டுமே. டி20 கிரிக்கெட்டில் ஒரு தொடக்க வீரர் மற்றும் கேப்டன் இவ்வளவு மெதுவாக ஆடியது சிஎஸ்கே அணியின் ஸ்கோரை வெகுவாகப் பாதித்தது.
மோசமான சாதனை
2026 ஐபிஎல் தொடரில் முதல் 6 ஓவர்களில் (பவர் பிளே) மிகக் குறைந்த ஸ்டிரைக் ரேட்டில் ரன் சேர்த்த வீரர்கள் பட்டியலில் ருதுராஜ் கெய்க்வாட் முதலிடத்தைப் பிடித்துள்ளார். அவர் இந்த சீசனில் பவர் பிளே ஓவர்களில் மட்டும் 182 ரன்கள் எடுத்துள்ளார், ஆனால் அவரது ஸ்டிரைக் ரேட் 124.6 மட்டுமே. அவருக்கு அடுத்த இடங்களில் இருப்பவர்கள் கூட இவரை விடச் சிறப்பாகவே ஆடியுள்ளனர்.
ருதுராஜ் கெய்க்வாட் - 124.6 ஸ்டிரைக் ரேட்
அங்கிரிஷ் ரகுவன்ஷி - 126.5 ஸ்டிரைக் ரேட்
அஜின்கியா ரஹானே - 127.0 ஸ்டிரைக் ரேட்
சாய் சுதர்சன் - 144.4 ஸ்டிரைக் ரேட்
பிளே-ஆப் வாய்ப்பை உறுதி செய்ய மிகப்பெரிய ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் சிஎஸ்கே அணி உள்ளது. இத்தகைய இக்கட்டான சூழலில், அணியை வழிநடத்த வேண்டிய கேப்டனே அதிரடி காட்டாமல் மெத்தனமாக ஆடியது அந்த அணியின் வெற்றி வாய்ப்பிற்கு மிகப்பெரிய தடையாக மாறியது. ருதுராஜின் இந்த மந்தமான ஆட்டம் சமூக வலைதளங்களில் சிஎஸ்கே ரசிகர்களின் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. தோனி விளையாடாத நிலையில், ருதுராஜ் பொறுப்புடன் ஆடுவார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.


Click it and Unblock the Notifications
