IPL 2026: 10 ஆண்டுகளில் எந்த ஐபிஎல் அணியும் செய்யாததை செய்த டெல்லி கேப்பிடல்ஸ்.. அரிய சாதனை
தரம்சாலா: கடந்த 10 ஆண்டுகளில் முதல் முறையாக ஒரு அரிய சம்பவத்தை டெல்லி கேப்பிடல்ஸ் அணி அரங்கேற்றி ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. தரம்சாலாவில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்துவீசிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி, தனது 20 ஓவர்களையும் அதாவது 120 பந்துகளையும் வேகப்பந்து வீச்சாளர்களைக் கொண்டே வீசி முடித்துள்ளது.
மிட்செல் ஸ்டார்க், லுங்கி நெகிடி, ஆகிப் நபி தார், முகேஷ் குமார் மற்றும் அறிமுக வீரர் மாதவ் திவாரி ஆகிய 5 வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டுமே தலா 4 ஓவர்கள் வீசினர். ஐபிஎல் வரலாற்றில் ஒரு இன்னிங்சில் சுழற்பந்து வீச்சாளர்களைப் பயன்படுத்தாமல் 120 பந்துகளையும் வேகப்பந்து வீச்சாளர்கள் வீசுவது இது 13வது முறையாகும். ஐபிஎல் தொடரில் இதற்கு முன் கடந்த 2016ல் பெங்களூரு அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இப்படி ஒரு சாதனையை செய்திருந்தது. அதன்பின் 10 ஆண்டுகள் கழித்து தற்போது டெல்லி அணி இதனை செய்துள்ளது.

டெல்லி அணியின் கேப்டன் அக்சர் படேல் மட்டுமே அந்த அணியின் ஒரே சுழற்பந்து வீச்சாளர் ஆவார். ஆனால் அவரே இந்த போட்டியில் ஒரு ஓவர் கூட வீசவில்லை. தரம்சாலா மைதானத்தில் வேகப்பந்து வீச்சுக்கு நல்ல ஒத்துழைப்பு இருந்ததால் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். ஆட்டத்தின் முதல் 10 ஓவர்களில் ஆகிப் நபி சிறப்பாக பந்தை ஸ்விங் செய்தார். மைதானத்தில் இருந்த பவுன்ஸ் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு கைகொடுத்தது.
அறிமுக வீரர் மாதவ் திவாரி தனது முதல் விக்கெட்டாக 56 ரன்கள் எடுத்த பிரியான்ஷ் ஆர்யாவை வீழ்த்தினார். ஆடுகளத்தின் தன்மை குறித்து திவாரி கூறுகையில், மைதானத்தில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு நல்ல உதவி கிடைத்தது, சரியான லெந்தில் பந்துவீசினால் பேட்ஸ்மேன்களால் ரன் அடிப்பது கடினம் என்பதை உணர்ந்து வீசியதாக தெரிவித்தார்.
ஆட்டத்தின் பிற்பாதியில் பஞ்சாப் அணி அதிரடியாக ரன்களை குவித்த போதிலும், அக்சர் படேல் தன்னை பயன்படுத்திக்கொள்ளவே இல்லை. வேகப்பந்து வீச்சாளர்கள் பந்தின் வேகத்தை குறைத்து வீசி விக்கெட்டுகளை வீழ்த்தினர். குறிப்பாக ஆட்டத்தின் இறுதி கட்டத்தில் மிட்செல் ஸ்டார்க் அடுத்தடுத்த பந்துகளில் மார்கஸ் ஸ்டோய்னிஸ் மற்றும் ஷஷாங்க் சிங் விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
லுங்கி நெகிடி வீசிய 20வது ஓவரில் வெறும் 7 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுக்கப்பட்டது. பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்கள் எடுத்தது. சுழற்பந்து வீச்சாளர்கள் இல்லாமல் முழுக்க முழுக்க வேகப்பந்து வீச்சாளர்களை மட்டுமே நம்பி டெல்லி கேப்டன் எடுத்த இந்த துணிச்சலான முடிவு கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications
