IPL 2026: பச்சை சட்டை போட்ட ஆர்சிபி அணியை திட்டம் போட்டு காலி செய்த அக்சர் படேல்.. டெல்லி வெற்றி
பெங்களூரு: 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 26-வது லீக் போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கும் இடையே ஒரு அனல் பறக்கும் மோதல் நடைபெற்றது. சுற்றுச்சூழல் விழிப்புணர்வைக் குறிக்கும் வகையில் பச்சை நிறச் சீருடை அணிந்து களம் கண்ட பெங்களூரு அணிக்கு, ஆட்டத்தின் ஒரு கட்டத்தில் வெற்றி நிச்சயம் என்றே தோன்றியது. ஆனால், டெல்லி கேப்டன் அக்சர் படேல் ஆடுகளத்தில் செய்த ஒரு செயல் ஆட்டத்தின் போக்கையே தலைகீழாக மாற்றியது. அவர் திடீரென ஆடுகளத்தை விட்டு வெளியேறிய அந்த நிமிடத்தில் தான் பெங்களூரு அணியின் தோல்விக்கான விதை ஊன்றப்பட்டது. எப்படி டெல்லி கேப்பிட்டலஸ் வென்றது?
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்தது. தொடக்க வீரர் பிலிப் சால்ட் அபாரமாக விளையாடி 38 பந்துகளில் 63 ரன்கள் விளாசினார். ஆனால், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் களம் இறங்கிய விராட் கோலி 13 பந்துகளில் 19 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றம் அளித்தார். மற்ற பேட்ஸ்மேன்களும் சொற்ப ரன்களில் வெளியேறியதால், பெங்களூரு அணி 200 ரன்களை எட்டவில்லை.

தொடர்ந்து 176 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய டெல்லி அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. வெறும் 2.5 ஓவர்களில் 18 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து அந்த அணி நிலைகுலைந்தது. அப்போது களம் புகுந்த கே.எல். ராகுல் தனி ஒருவனாகப் போராடி 34 பந்துகளில் 57 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதன் பிறகு டிரிஸ்டன் ஸ்டப்ஸ் மற்றும் கேப்டன் அக்சர் படேல் ஜோடி நிதானமாக விளையாடி ரன்களைச் சேர்த்தது. ஸ்டப்ஸ் அரைசதம் அடித்து அசத்தினார்.
ஆட்டத்தின் 16-வது ஓவரில் தான் அந்தத் திருப்புமுனை ஏற்பட்டது. 19 பந்துகளில் 26 ரன்கள் எடுத்திருந்த அக்சர் படேல், திடீரென தனக்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டதாகக் கூறி ஆடுகளத்தை விட்டு மிகவும் சிரமப்பட்டு வெளியேறினார். இது உண்மையான காயமா அல்லது ஒரு வியூகமா என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு எழுந்தது. ஏனெனில், அக்சர் படேல் நிதானமாக ரன் சேர்த்துக் கொண்டிருந்தார், ஆனால் கடைசி 4 ஓவர்களில் 41 ரன்கள் தேவை என்ற நிலையில் அதிரடி ஆட்டம் அவசியமாக இருந்தது.
அக்சர் வெளியேறியவுடன் 'கில்லர்' மில்லர் என்று அழைக்கப்படும் டேவிட் மில்லர் உள்ளே வந்தார். வந்த வேகத்தில் 10 பந்துகளில் 22 ரன்கள் குவித்து பெங்களூரு பந்துவீச்சை சிதறடித்தார் மில்லர். இதனால் ஆட்டம் டெல்லி பக்கம் முழுமையாகச் சாய்ந்தது. குறிப்பாக கடைசி ஓவரில் 2 சிக்ஸர்களை விளாசி ஆர்சிபி அணியின் தோல்வியை உறுதி செய்தார். இறுதியில் 19.5 ஓவர்களில் டெல்லி அணி இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
அக்சர் படேல் காயத்தைக் காரணம் காட்டி வெளியேறி, மில்லரை உள்ளே அனுப்பியது ஒரு திட்டமிட்ட 'ரிட்டையர் அவுட்' வியூகம் என்றே பலரும் கருதுகின்றனர். அதை வெளிப்படையாக ரிட்டையர்ட் அவுட் என்று சொல்லாமல் ரிட்டையர்ட் ஹர்ட் ஆகி வெளியேறினார் அக்சர். பிற்பகுதியில் விக்கெட் வீழ்ந்தால் மீண்டும் பேட்டிங் செய்ய வர வேண்டும் என்றால் ரிட்டையர்ட் ஹர்ட் ஆனால் தான் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சாதுர்யமான முடிவு ஆர்சிபி அணியின் வெற்றிக் கனவைத் தகர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications