IPL 2026: தமிழக வீரர் நடராஜன் மாஸ் கம்பேக்.. அபார பந்துவீச்சால் தட்டு தடுமாறிய லக்னோ பேட்டிங்
லக்னோ: ஐபிஎல் 2026 தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், தமிழக வீரர் நடராஜன் அபாரமாக பந்துவீசி, லக்னோ அணியை 141 ரன்களில் சுருட்டினார். இதன் மூலம் 34 வயதில் நடராஜன் மாஸ் கம்பேக் கொடுத்து அசத்தியுள்ளார். இதனால் லக்னோ அணி 18.4 ஓவர்களிலேயே ஆல் அவுட் செய்தனர்.
போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. லக்னோ அணியின் பேட்டிங் வரிசையில் செய்யப்பட்ட பரிசோதனைகள் அனைத்தும் பெரும் பின்னடைவாக மாறின. ரிஷப் பண்ட் தொடக்க வீரராக களமிறங்கி 9 பந்துகளில் 7 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றினார்.

வழக்கமான தொடக்க வீரரான எய்டன் மார்க்ரம் மூன்றாவது இடத்தில் களமிறங்கியதும் பலன் தரவில்லை, அவர் 8 பந்துகளில் 11 ரன்களில் ஆட்டமிழந்தார். நான்காவது வீரராக நிகோலஸ் பூரானுக்கு முன்னதாக ஆயுஷ் படோனி களமிறங்கியது ஆச்சரியமான மாற்றமாக இருந்தது, ஆனால் அவர் மூன்று பந்துகளில் ரன் எதுவுமின்றி டக் அவுட் ஆகி வெளியேறினார். நம்பிக்கைக்குரிய மிட்செல் மார்ஷும் விரைவில் வெளியேறியதால், லக்னோவின் கஷ்டங்கள் மேலும் அதிகரித்தன.
லக்னோ அணியால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழக்க நேர்ந்ததால், எந்த ஒரு குறிப்பிடத்தக்க பார்ட்னர்ஷிப்களும் அமையவில்லை. முக்கிய வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழந்தனர். இதனால், லக்னோ அணி தங்கள் முழுமையான 20 ஓவர்களையும் விளையாட முடியாமல் 141 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பந்துவீச்சாளர்கள் ஆரம்பத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்தினர். லக்னோவின் பேட்ஸ்மேன்களுக்கு எந்தவிதமான வாய்ப்பையும் கொடுக்காமல் கடுமையாகப் பந்துவீசினர். குறிப்பாக சுழற்பந்து வீச்சாளர்கள் நடு ஓவர்களில் ரன் கட்டுப்பாடுடன் விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.
அப்துல் சமத் சற்று பொறுமையுடன் தொடங்கி, தனது வழக்கமான அதிரடி பாணிக்கு மாறாமல் நிதானமாக ஆடினார். அவர் 19 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தார்.ஆட்டத்தின் கடைசி கட்டத்தில் அப்துல் சமத் களத்தில் இருந்தவரை, லக்னோ அணி 170 ரன்களை எட்டுவது சாத்தியமா என்ற கேள்வி எழுந்தது. எனினும், அவரது விக்கெட்டை இழந்த பிறகு, லக்னோ அணிக்கு ஒரு சவாலான இலக்கை நிர்ணயிக்கும் நம்பிக்கை குறைந்தது. ஷாபாஸ் அகமது மற்றும் முகமது ஷமி கடைசி கட்டத்தில் சில ரன்களை சேர்த்தனர்.
டெல்லி தரப்பில் பந்துவீச்சில் லுங்கி இங்கிடி 3.4 ஓவர்களில் 27 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டினார். டி. நடராஜன் தனது 4 ஓவர்களில் 29 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றினார். குல்தீப் யாதவும் 4 ஓவர்களில் 31 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி லக்னோவின் சரிவுக்கு வழிவகுத்தார்.
அப்துல் சமத் ஆட்டமிழந்த பிறகு, லக்னோ அணிக்கு மேலும் பின்னடைவு ஏற்பட்டது. முகமது ஷமி, அன்ரிச் நார்ஜே, மொஹ்சின் கான் போன்ற கடைநிலை வரிசை வீரர்களும் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கவில்லை. மொஹ்சின் கான், லுங்கி இங்கிடி வீசிய பந்தில் முகேஷ் குமாரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்ததும், லக்னோ அணி 141 ரன்களில் ஆல் அவுட் ஆனது.டெல்லி கேப்பிடல்ஸ் அணியின்Axar பட்டேல் மற்றும் அவரது சக வீரர்கள், தங்கள் ஐபிஎல் 2026 தொடரின் முதல் போட்டியில் 142 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன், இரண்டு புள்ளிகளைப் பெறுவதற்கான வாய்ப்புடன் களமிறங்க உள்ளனர்.


Click it and Unblock the Notifications