IPL 2026 Final: இந்த வீரரை அணிக்குள் சேர்த்து விட்டால், ஆர்சிபி தோல்வி உறுதி.. ஸ்ரீகாந்த் அதிருப்தி
அகமதாபாத்: இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கிருஸ் ஸ்ரீகாந்த், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு ஐபிஎல் 2026 இறுதிப் போட்டிக்கான முக்கிய ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.அகமதாபாத்தில் குஜராத் டைட்டன்ஸ் (GT) அணியுடன் மோதும் ஆர்சிபி, ஆல்-ரவுண்டர் ரொமாரியோ ஷெப்பர்டை பந்துவீச அனுமதிக்கவோ அல்லது அணியில் சேர்க்கவோ கூடாது எனத் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து வீரர் பில் சால்ட் உடல்நலம் தேறி வந்தாலும், தொடக்க ஆட்டக்காரராக வெங்கடேஷ் ஐயரையே களமிறக்குமாறும் ஸ்ரீகாந்த் வலியுறுத்தியுள்ளார். ஷெப்பர்ட் இத்தொடரில் 14 போட்டிகளில் வெறும் 7 விக்கெட்டுகளை மட்டும் எடுத்து, 42.57 என்ற மோசமான சராசரி மற்றும் ஏறக்குறைய 12 என்ற எக்கனாமி ரேட்டுடன் மிக மோசமாகப் பந்துவீசியுள்ளார்.

தனது யூடியூப் சேனலான "சீக்கி சீக்கா"வில் பேசிய ஸ்ரீகாந்த், "பில் சால்ட் குறித்து இப்போதைக்கு செய்திகள் இல்லை. அவர் உடல்நலம் தேறி வந்தாலும், இப்போ மாற்றங்கள் வேண்டாம், வெங்கடேஷ் ஐயர் நன்றாக விளையாடுகிறார். ரொமாரியோ ஷெப்பர்ட் மூன்று ஓவர்கள் வீசினால், ஆர்சிபி நிச்சயம் தோற்கும். அவர் பந்துவீசக்கூடாது, அணியிலேயே இருக்கக்கூடாது" என்று திட்டவட்டமாக கூறினார்.
வெங்கடேஷ் ஐயர், இந்த சீசனில் 5 இன்னிங்ஸ்களில், குறிப்பாக தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய கடைசி இரண்டு ஆட்டங்களில் மிக சிறப்பாகச் செயல்பட்டுள்ளார். அவர் 59 சராசரியுடனும், 184-க்கும் அதிகமான ஸ்ட்ரைக் ரேட்டுடனும் ரன்களைக் குவித்துள்ளார். பில் சால்ட் இந்த ஐபிஎல் 2026 சீசனின் முதல் ஆறு போட்டிகளில் மட்டுமே விளையாடி, காயம் காரணமாக பாதிக்கும் மேற்பட்ட ஆட்டங்களைத் தவறவிட்டது குறிப்பிடத்தக்கது.
குஜராத் டைட்டன்ஸ் (GT) அணி வெற்றி பெற வேண்டுமானால், விராட் கோலி மற்றும் தேவ்தத் படிக்கல் இடையிலான இரண்டாவது விக்கெட் பார்ட்னர்ஷிப்பை முறியடிப்பது மிக அவசியம் என்று ஸ்ரீகாந்த் வலியுறுத்தியுள்ளார். இந்த சீசனில் கோலி 600 ரன்களுடன் ஆர்சிபியின் பேட்டிங்கை வழிநடத்த, படிக்கல் 463 ரன்களுடன் (ஸ்ட்ரைக் ரேட் 170-க்கும் மேல்) மூன்றாவது முக்கிய இடத்தில் உள்ளார்.
"ஜிடி வெற்றி பெற வேண்டுமானால், விராட் கோலி-தேவ்தத் படிக்கல் பார்ட்னர்ஷிப்பை உடைக்க வேண்டும். விராட் கோலி 40 ரன்கள் எடுத்தாலே ஆர்சிபி எப்போதும் வெல்லும். ஆனால், படிக்கலுடன் அவர் அமைக்கும் கூட்டணிதான் அவர்களுக்கு முக்கியம். இந்த இருவரில் ஒருவர் சீக்கிரம் அவுட்டாகி, கணிசமான பார்ட்னர்ஷிப் அமையவில்லை எனில், ஆர்சிபி தடுமாறும்" என்றார்.
"விராட் கோலி, தேவ்தத் படிக்கல், ரஜத் பட்டிதார் ஆகிய மூவரையும் ஆரம்பத்திலேயே அவுட் செய்தால் மட்டுமே ஜிடிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது. இவர்களில் இருவர் சிறப்பாக விளையாடினால், ஆர்சிபிதான் வெற்றியாளர். எனவே, வெற்றி வாய்ப்பு கிடைக்க வேண்டுமானால், இந்த மூவரில் குறைந்தது இருவரையாவது ஜிடி முதலில் அவுட் செய்ய வேண்டும். ஜிடி வெல்ல ககிசோ ரபாடா மற்றும் முகமது சிராஜ் இருவரும் இணைந்து சிறப்பாக பந்துவீச வேண்டும்" என அவர் வலியுறுத்தினார்.
ரஜத் பட்டிதார் இந்த சீசனில் 14 போட்டிகளில் விளையாடி, 44-க்கும் அதிகமான சராசரியுடனும் 196.76 ஸ்ட்ரைக் ரேட்டுடனும் 486 ரன்கள் குவித்து, ஆர்சிபியின் முன்னணி ரன் குவிப்பாளர்களில் ஒருவராக உள்ளார். ஸ்ரீகாந்த சொன்ன யோசனையை கேட்காத ஆர்சிபி ஷெபர்டை சேர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications

