ஆர்சிபி வெற்றி பெற்றாலும் கொண்டாடக் கூடாது.. LED ஸ்க்ரீனில் ஒளிபரப்பவும் தடை.. காவல்துறை எச்சரிக்கை
பெங்களூரு: 2026 ஐபிஎல் தொடரின் கோப்பை யாருக்கு என்பதைத் தீர்மானிக்கும் இறுதிப்போட்டி இன்று (மே 31) அகமதாபாத்தில் நடைபெறுகிறது. இதில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மோதுகிறது. பெங்களூரு அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளதால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். இந்த நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக பெங்களூரு மாநகர போலீசார் அதிரடி கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
பழைய கசப்பான அனுபவம்
கடந்த 2025-ம் ஆண்டு சின்னசாமி மைதானத்திற்கு வெளியே ஐபிஎல் வெற்றிக் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். அந்த கசப்பான சம்பவம் மீண்டும் பெங்களூரு நகரில் நடந்துவிடக்கூடாது என்பதில் போலீசார் மிகவும் உறுதியாக உள்ளனர். சட்ட ஒழுங்கை நிலைநாட்டவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் புதிய வழிகாட்டுதல்களை பெங்களூரு போலீசார் வெளியிட்டுள்ளனர்.

கொண்டாட்டங்களுக்குத் தடை
இந்த இறுதிப்போட்டி முடிந்து அதில் பெங்களூரு அணி வெற்றி பெற்றாலும், பெங்களூரு நகரில் பொது இடங்களில் பட்டாசு வெடிக்கவோ, சாலைகளில் ஊர்வலமாகச் சென்று கொண்டாட்டங்களில் ஈடுபடவோ அனுமதி இல்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் எவ்வித செயல்களிலும் ஈடுபடக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முக்கிய சாலைகளை நோக்கி வைக்கப்பட்டுள்ள எல்இடி திரைகளில் போட்டியை ஒளிபரப்பத் தடை விதிக்கப்பட்டுள்ளது. முன் அனுமதி இன்றி வைக்கப்பட்ட திரைகளை அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், மால்கள், பப்கள் அல்லது உணவகங்களுக்கு வெளியே மக்கள் திரண்டு போட்டியைப் பார்க்கும் வகையில் திரைகளை வைக்கக்கூடாது என போலீசார் உத்தரவிட்டுள்ளனர். இது போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க எடுக்கப்பட்ட நடவடிக்கையாகும்.
சமூக வலைதளக் கண்காணிப்பு
வெற்றி அல்லது தோல்வியைக் காரணம் காட்டி சமூக வலைதளங்களில் மற்ற அணி ரசிகர்களை வம்புக்கு இழுக்கும் விதமாகவோ, வெறுப்புணர்வையோ அல்லது ஆத்திரமூட்டும் விதமாகவோ பதிவுகளை இடக்கூடாது. மற்ற அணிகளை இழிவுபடுத்தும் விதமாக நடப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.
2026 ஐபிஎல் இறுதிப்போட்டி 1,30,000 ரசிகர்கள் அமரக்கூடிய அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. சொந்த மண்ணில் குஜராத் அணி வலுவாக இருந்தாலும், பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சமபலத்துடன் உள்ள பெங்களூரு அணி கோப்பையை வெல்லும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். அதே சமயம், பெங்களூரு நகர மக்களின் பாதுகாப்பு கருதி போடப்பட்டுள்ள இந்த உத்தரவுகளைப் பொதுமக்கள் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications
