IPL 2026: ஜாம்பவான் கேப்டன்கள் மட்டுமே செய்த ரெக்கார்டை செய்து காட்டிய ஆர்சிபி கேப்டன் ரஜத் படிதார்
அகமதாபாத்: 2026 ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி இரண்டாவது முறையாகக் கோப்பையைக் கைப்பற்றியது. இதன் மூலம் தொடர்ச்சியாக அடுத்தடுத்த ஆண்டுகளில் கோப்பையை வென்று ஆர்சிபி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. அந்த அணியின் கேப்டன் ரஜத் படிதார் மாபெரும் கேப்டன்சி சாதனை ஒன்றை செய்து இருக்கிறார்.
ரஜத் படிதாரின் இமாலய சாதனை
ஆர்சிபி அணியின் கேப்டன் ரஜத் படிதார், ஜாம்பவான்கள் மட்டுமே செய்த மாபெரும் கேப்டன்சி சாதனையைச் செய்து வியப்பை ஏற்படுத்தியுள்ளார். ஐபிஎல் வரலாற்றில் இதற்கு முன் இரண்டு கேப்டன்கள் மட்டுமே அடுத்தடுத்த ஆண்டுகளில் தங்களது அணிகளுக்குக் கோப்பையை வென்று கொடுத்துள்ளனர். அந்த இரு கேப்டன்கள் ஜாம்பவான்களான எம்.எஸ்.தோனி மற்றும் ரோஹித் சர்மா ஆவர். அவர்களுக்குப் பிறகு, இந்த அரிய சாதனையை நிகழ்த்திக் காட்டிய மூன்றாவது கேப்டன் என்ற பெருமையை ஆர்சிபி அணியின் ரஜத் படிதார் பெற்றுள்ளார்.

ஐபிஎல் வரலாற்றின் முதல் 17 ஆண்டுகளில் ஒரு முறை கூட கோப்பை வெல்லாத ஆர்சிபி அணி, கடந்த 2025-ம் ஆண்டுதான் முதன்முறையாகச் சாம்பியன் பட்டம் வென்றது. அப்போதும் ரஜத் படிதாரே அணியை வழிநடத்தினார். இந்த 2026 சீசனிலும் ஆர்சிபி அணியை அவர் சிறப்பாக வழிநடத்தினார். லீக் சுற்றில் ஆர்சிபி அணி சிறப்பாகச் செயல்பட்டு புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்து பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறியது. முதல் தகுதிச் சுற்றுப் போட்டியிலும் குஜராத் அணியை வீழ்த்திய ஆர்சிபி, இறுதிப் போட்டியிலும் அதே குஜராத் அணியைச் சந்தித்தது.
குஜராத் திணறல்
அகமதாபாத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி, ஆர்சிபி-யின் துல்லியமான பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் மட்டுமே எடுத்தது. தமிழக ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் மட்டுமே பொறுப்புடன் விளையாடி 50 ரன்கள் குவித்தார்.
விராட் கோலியின் 'கிங்' ஆட்டம்
156 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய ஆர்சிபி அணிக்கு, தொடக்க வீரர் வெங்கடேஷ் ஐயர் 32 ரன்கள் எடுத்து நல்ல அடித்தளம் அமைத்தார். நடுவரிசையில் 5 விக்கெட்டுகளை இழந்த நிலையிலும், நட்சத்திர வீரர் விராட் கோலி நங்கூரமிட்டு ஆடுகளத்தில் நின்றார். அவர் தனது அதிவேக ஐபிஎல் அரைசதத்தை விளாசினார். இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்த கோலி, 42 பந்துகளில் 9 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 75 ரன்கள் குவித்தார்.


Click it and Unblock the Notifications
