சென்னை: 2026 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வியைத் தழுவியுள்ளது. இந்த நிலையில், கடந்த ஏப்ரல் 4ஆம் தேதி நடைபெற்ற போட்டிகளில் சிஎஸ்கே அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட இரண்டு வீரர்கள் தங்களது புதிய அணிகளுக்காக அபாரமாக விளையாடி வெற்றியைத் தேடித்தந்துள்ளனர். இது சென்னை அணி நிர்வாகத்திற்கு ஒரு கசப்பான உண்மையை உணர்த்தியுள்ளது.
டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் சமீர் ரிஸ்வி மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் துஷார் தேஷ்பாண்டே ஆகிய இருவருமே ஒரு காலத்தில் சென்னை அணியில் இருந்தவர்கள். ஆனால், மெகா ஏலத்திற்கு முன்பாக இவர்கள் விடுவிக்கப்பட்டனர். இப்போது அவர்கள் மற்ற அணிகளுக்காக விளையாடி வெற்றிகளை குவித்து வருகின்றனர்.

கடந்த 2024 ஏலத்தில் சமீர் ரிஸ்வியை சென்னை அணி 8.40 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது. ஒரு இளம் வீரருக்காக இவ்வளவு பெரிய தொகையைச் செலவழித்தது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. ஆனால், அடுத்து மெகா ஏலம் வந்ததால் அவரை அந்த ஆண்டுடன் விடுவித்தது.
2025 மெகா ஏலத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி சமீர் ரிஸ்வியை வெறும் 95 லட்சம் ரூபாய்க்கு வாங்கியது. சனிக்கிழமை மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 163 ரன்கள் என்ற இலக்கை துரத்திய போது, சமீர் ரிஸ்வி 51 பந்துகளில் 90 ரன்கள் குவித்து டெல்லி அணியின் வெற்றியை உறுதி செய்தார். கடினமான ஆடுகளத்தில் 7 சிக்ஸர்கள் மற்றும் 7 பவுண்டரிகளை விளாசி அவர் காட்டிய அதிரடி, சென்னை அணிக்கு ஒரு பெரிய இழப்பாகவே பார்க்கப்படுகிறது.
துஷார் தேஷ்பாண்டேவின் கதை சற்று வித்தியாசமானது. 2022 ஏலத்தில் அவரை வெறும் 20 லட்சம் ரூபாய்க்கு சென்னை அணி வாங்கியது. 2023ஆம் ஆண்டு சென்னை அணி கோப்பையை வென்றபோது, 16 போட்டிகளில் 21 விக்கெட்டுகளை வீழ்த்தி அந்த அணியின் அதிக விக்கெட் எடுத்த வீரராகத் திகழ்ந்தார்.
ஆனால், 2025 மெகா ஏலத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அவரை 6.50 கோடி ரூபாய்க்கு வாங்கியது. குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் மிகச்சரியான யார்க்கர்களை வீசி 6 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் வெற்றி பெற அவர் முக்கிய காரணமாக இருந்தார்.
சென்னை அணி தனது பந்துவீச்சில் தடுமாறி வரும் இந்தச் சூழலில், தாங்கள் வளர்த்தெடுத்த ஒரு வீரர் மற்றொரு அணிக்காக வெற்றியைத் தேடித்தருவது அந்த அணிக்கு ஒரு பாடமாக அமைந்துள்ளது. திறமையான வீரர்களை அடையாளம் காண்பது ஒரு கலை என்றால், அவர்களைச் சரியான நேரத்தில் தக்கவைத்துக்கொள்வதும் ஒரு சவாலான விஷயம் தான். அதில் சிஎஸ்கே அணி சறுக்கி உள்ளது.

சமீர் ரிஸ்வி மற்றும் துஷார் தேஷ்பாண்டே ஆகியோரின் இந்த எழுச்சி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்த சில முடிவுகள் தவறோ என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. இருப்பினும், இது மெகா ஏலத்தின் ஒரு பகுதி தான் என்றாலும், சிஎஸ்கே கைவிட்ட அந்த வைரங்கள் இப்போது மற்ற அணிகளுக்காக ஜொலித்து வருகின்றன.
