IPL 2026: "எல்லாமே கைமீறி போகுது!".. 5வது மேட்ச் தோற்றுவிட்டு கொல்கத்தா கேப்டன் ரகானே உருக்கம்
அகமதாபாத்: 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராகக் கடுமையாகப் போராடியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. தொடர் தோல்விகளால் துவண்டுள்ள கொல்கத்தா அணியின் கேப்டன் அஜிங்க்யா ரகானே, ஆட்டத்தின் ஒரு கட்டத்தில் தங்களுக்குச் சாதகமாக இருந்த வெற்றி வாய்ப்பு எப்படி நழுவிப் போனது என்பது குறித்து வேதனையுடன் பேசியுள்ளார்.
அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற 25-வது லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 180 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தொடக்கத்திலேயே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது, கேமரூன் கிரீன் அதிரடியாக விளையாடி 79 ரன்கள் குவித்தார். பின்னர் 181 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய குஜராத் அணி, சுப்மன் கில்லின் (86 ரன்கள்) சிறப்பான ஆட்டத்தால் 19.4 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது.

கிரீன் அதிரடி
தோல்வி குறித்துப் பேசிய கேப்டன் ரகானே, "தோல்விக்கு பிறகு உடனடியாகப் பேசுவது எப்போதும் எளிதல்ல. ஆனாலும் சில நேர்மறையான விஷயங்களைப் பேச விரும்புகிறேன். 2 அல்லது 3 விக்கெட்டுகளை ஆரம்பத்திலேயே இழந்த பிறகு, கேமரூன் கிரீன் ஆடிய விதம் அபாரமானது. அவர் கடும் அழுத்தத்தில் இருந்தபோதும், குஜராத் பந்துவீச்சை எதிர்த்துத் தாக்கிய விதம் அணிக்குத் தேவையான வேகத்தைக் கொடுத்தது. ஒரு கட்டத்தில் நாங்கள் 147 ரன்களுக்கு 4 விக்கெட் என்ற வலுவான நிலையில் இருந்தோம். அங்கிருந்து 180 ரன்களுக்குச் சுருங்கியது சற்று பின்னடைவுதான்" என்றார்.
கிரீன் பந்துவீசாதது ஏன்?
கொல்கத்தா அணியின் முக்கிய ஆல்-ரவுண்டரான கேமரூன் கிரீன் பேட்டிங்கில் அசத்திய போதிலும், பந்துவீச்சில் ஒரு ஓவர் கூட வீசவில்லை. இது குறித்து ரகானே விளக்குகையில், "கிரீனுக்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டிருந்தது. அதனால் தான் அவர் மைதானத்திற்கு உள்ளேயும் வெளியேயும் சென்று கொண்டிருந்தார். அந்த காரணத்தால்தான் அவர் இன்று பந்துவீசவில்லை" எனத் தெளிவுபடுத்தினார்.
கில்லின் ஆட்டம்
குஜராத் கேப்டன் கில்லின் பேட்டிங் குறித்துப் பேசிய ரகானே, "சுப்மன் கில் மிகச் சிறப்பாக விளையாடினார். தொடக்கத்தில் ஆடுகளம் சற்று மெதுவாக இருந்ததாக உணர்ந்தேன். பனிப்பொழிவும் சிறிய தாக்கத்தை ஏற்படுத்தியது. பவர்பிளே ஓவர்களில் நாங்கள் விக்கெட்டுகளை எடுத்திருக்க வேண்டும், ஆனால் அவர்கள் அருமையாக விளையாடினர். எங்களது பந்துவீச்சாளர்கள் ஆட்டத்தை கடைசி ஓவர் வரை கொண்டு சென்றது பாராட்டத்தக்கது" என்றார்.
கொல்கத்தாவின் நிலை
தொடர் தோல்விகளில் இருந்து மீள்வது குறித்துப் பேசிய அவர், "விஷயங்கள் நமக்குச் சாதகமாக இல்லாத போது நாம் நிறைய யோசிப்போம். ஆனால், அந்தந்த தருணங்களில் சரியாகச் செயல்படுவதுதான் முக்கியம். விளையாட்டை ரசித்து ஆட வேண்டும். நம்மால் கட்டுப்படுத்த முடியாத விஷயங்களைப் பற்றி யோசிப்பதை விட, ஒரு அணியாக நம்மை நாமே நம்பி ஆக்ரோஷமாக விளையாட வேண்டும்" என ரகானே உருக்கமாகத் தெரிவித்தார். கொல்கத்தா அணி 5 போட்டிகளில் விளையாடி இன்னும் ஒரு வெற்றியைக் கூடப் பதிவு செய்யாமல் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது.


Click it and Unblock the Notifications