IPL 2026: ஒரே ஓவரில்.. மிரள வைத்த கோலி.. ரபாடாவை துவம்சம் செய்து கிறிஸ் கெய்ல் சாதனையை சமன் செய்தார்
அகமதாபாத்: குஜராத் டைட்டன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இடையிலான 42-வது லீக் போட்டியில் விராட் கோலி, ககிசோ ரபாடா ஓவரை குறி வைத்து பவுண்டரி மழை பொழிந்தார். உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளரான ரபாடாவை, ஒரே ஓவரில் 5 அடுத்தடுத்த பவுண்டரிகள் விளாசி கோலி நிலைகுலையச் செய்தார். இதன் மூலம் ஜாம்பவான் கிறிஸ் கெய்ல் பல ஆண்டுகளுக்கு முன்பு படைத்த ஒரு வரலாற்றுச் சாதனையை கோலி சமன் செய்துள்ளார்.
இந்தப் போட்டி தொடங்கிய உடன் பவர்பிளே ஓவர்களில் ககிசோ ரபாடா பந்துவீச வந்தபோது, கோலி தனது அதிரடி ஆட்டத்தைத் தொடங்கினார். ரபாடாவின் வேகத்தை மிக நேர்த்தியாகப் பயன்படுத்திய கோலி, கவர் திசையில் ஒரு பவுண்டரி, பாயிண்ட் திசையில் ஒன்று எனப் பந்துகளை எல்லைக்கோட்டிற்கு விரட்டினார். ரபாடாவின் பந்துவீச்சுத் திட்டங்கள் அனைத்தையும் தவிடுப்பொடியாக்கிய கோலி, அந்த ஓவரில் 5 முறை பந்தைப் பவுண்டரிக்கு அனுப்பி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினார்.

இந்த அதிரடியின் மூலம் ஐபிஎல் வரலாற்றில் ஒரே ஓவரில் 5 பவுண்டரிகள் விளாசிய 3-வது ஆர்சிபி வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றார். இதற்கு முன்னதாக 2013-ம் ஆண்டு புனே வாரியர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கிறிஸ் கெய்ல் 5 பவுண்டரிகளை விளாசி இந்தச் சாதனையைத் தொடங்கி வைத்தார். அதன்பின் 2016-ல் திசாரா பெரேரா ஓவரிலும் இதேபோன்று 5 பவுண்டரிகள் அடித்தார் கெய்ல். சரியாக 13 ஆண்டுகளுக்குப் பிறகு கெய்லின் இந்த அரிய சாதனையை கோலி சமன் செய்து இருக்கிறார்.
இருப்பினும், இந்த மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. அடுத்த ஓவரிலேயே ககிசோ ரபாடா தனது பந்துவீச்சால் கோலிக்கு பதிலடி கொடுத்தார். ரன்களையும் பவுண்டரிகளையும் வாரி வழங்கியதால் கோபத்தில் இருந்த ரபாடா, தனது வேகத்தையும் பவுன்ஸையும் கூட்டி கோலியை திணறடித்தார். ரபாடா வீசிய ஒரு பந்தை கோலி தவறான நேரத்தில் அடிக்க முயல, அது பேட்டின் நுனியில் பட்டு உயரே எழும்பியது. மிட்-விக்கெட்டில் நின்றிருந்த நட்சத்திர வீரர் ரஷித் கான் எவ்வித தவறும் செய்யாமல் அந்தப் பந்தைப் பிடித்தார். கோலி ஆட்டமிழந்ததும் மைதானமே ஒரு நிமிடம் நிசப்தமானது. ரபாடா தனது விக்கெட்டை வீழ்த்திய ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினார்.
விராட் கோலி ஆட்டமிழந்த பிறகு ஆர்சிபி அணியின் ரன் வேகம் அடியோடு குறைந்தது. குஜராத் பந்துவீச்சாளர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை வீழ்த்தி ஆர்சிபி அணிக்கு நெருக்கடி கொடுத்தனர். 19.2 ஓவர்கள் முடிவில் ஆர்சிபி அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 155 ரன்கள் மட்டுமே எடுத்தது. கோலியின் அந்த 5 பவுண்டரிகள் கொண்ட ஓவர் ஒரு மின்னல் வேகத் தொடக்கமாக அமைந்தாலும், அதனை ஒரு பெரிய இன்னிங்ஸாக மாற்ற முடியாமல் போனது அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக முடிந்தது.


Click it and Unblock the Notifications