IPL 2026: வைபவ் ஜஸ்ட் மிஸ்.. கடைசி நேரத்தில் ஃபெரைரா அதிரடி.. குஜராத்துக்கு 215 ரன்கள் இமாலய இலக்கு
சண்டிகர்: 2026 ஐபிஎல் தொடரின் இரண்டாவது தகுதிச் சுற்று ஆட்டத்தில், இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் அபார ஆட்டத்தால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 214 ரன்கள் குவித்தது. சண்டிகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆரம்பமே அந்த அணிக்கு அதிர்ச்சியாக அமைந்தது.
நட்சத்திர வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 1 ரன்னிலும், விக்கெட் கீப்பர் துருவ் ஜூரல் 7 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். 9 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய ராஜஸ்தான் அணியை, 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி மீட்டார்.

வைபவ் அதிரடி
மைதானத்தின் நாலாபுறமும் பந்துகளைச் சிதறடித்த வைபவ் சூர்யவன்ஷி, குஜராத் பந்துவீச்சை துவம்சம் செய்தார். அவருக்கு 46 ரன்களில் இருந்தபோது சாய் சுதர்சன் கொடுத்த 'கேட்ச்' வாய்ப்பு குஜராத் அணிக்கு வினையாக முடிந்தது. அதனைப் பயன்படுத்திக்கொண்ட அவர், 47 பந்துகளில் 96 ரன்கள் குவித்தார். இதில் 8 பவுண்டரிகள் மற்றும் 7 மெகா சிக்ஸர்கள் அடங்கும். சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரபாடா பந்துவீச்சில் அவர் ஆட்டமிழந்தார்.
ஃபெரைரா மிரட்டல்
மறுபுறம் அனுபவ வீரர் ரவீந்திர ஜடேஜா நிதானமாக விளையாடி 35 பந்துகளில் 45 ரன்கள் சேர்த்தார். கேப்டன் ரியான் பராக் 11 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால், கடைசி நேரத்தில் களமிறங்கிய டோனோவன் ஃபெரைரா ஆட்டத்தின் போக்கையே மாற்றினார். வெறும் 11 பந்துகளை மட்டுமே சந்தித்த அவர் 4 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 38 ரன்கள் குவித்து மிரட்டினார். இவரது 'ஸ்ட்ரைக் ரேட்' 345.45 ஆகும். இதனால் ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் என்ற வலுவான ஸ்கோரை எட்டியது.
பந்துவீச்சு நிலவரம்
குஜராத் அணி தரப்பில் ஜேசன் ஹோல்டர் சிறப்பாகப் பந்துவீசி 4 ஓவர்களில் 27 ரன்கள் மட்டும் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ககிசோ ரபாடா 35 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஆனால், அந்த அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் மோசமாகச் சொதப்பினார். அவர் வீசிய 2 ஓவர்களில் மட்டும் 45 ரன்கள் வாரி வழங்கப்பட்டது. முகமது சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா தலா 1 விக்கெட்டை எடுத்தனர்.


Click it and Unblock the Notifications
