IPL 2026: கண்ணீரை அடக்க முடியாமல் தவித்த வைபவ் சூர்யவன்ஷி.. பாதியில் நின்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கனவு
சண்டிகர்: 2026 ஐபிஎல் தொடரின் இரண்டாவது தகுதிச் சுற்றுப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் ராஜஸ்தான் ராயல்ஸ் தோற்ற நிலையில், வைபவ் சூர்யவன்ஷி கண்ணீர் விட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தோல்வியடைந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து, தொடரில் இருந்து வெளியேறியது. இந்த தோல்வி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியைப் பெரிதும் பாதித்தது. போட்டி முடிந்ததும் மைதானத்தின் எல்லைக் கோடு அருகே அமர்ந்திருந்த அவர், தனது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் தேம்பி அழுதார்.

துண்டால் முகத்தை மூடிக்கொண்டு அவர் கண்ணீர் விட்ட காட்சி அங்கிருந்த வீரர்களையும் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. இவ்வளவு சிறிய வயதில் அணியின் வெற்றிக்காக அவர் காட்டிய அர்ப்பணிப்பு அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.
தனி ஒருவனாகப் போராட்டம்
முன்னதாக, ராஜஸ்தான் அணி ஆரம்பத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது, தனி ஒருவனாகப் போராடிய வைபவ் 47 பந்துகளில் 96 ரன்கள் குவித்தார். இதில் 8 பவுண்டரிகள் மற்றும் 7 மெகா சிக்ஸர்கள் அடங்கும். 9-வது ஓவர் முதல் 12-வது ஓவர் வரை விக்கெட்டுகள் சரிந்தபோது, தனது இயல்பான அதிரடியைக் குறைத்து நிதானமாக விளையாடி 31 பந்துகளில் அரைசதம் கடந்தார். இது இவரது ஐபிஎல் வரலாற்றில் மெதுவான அரைசதமாகும். இருப்பினும், ஒரு முனையில் நிலைத்து நின்று ஆடியதால் ராஜஸ்தான் அணி 214 ரன்களை எட்டியது.
சாதனை சீசன்
இந்த சீசனில் மொத்தம் 16 போட்டிகளில் விளையாடியுள்ள வைபவ் சூர்யவன்ஷி, 776 ரன்கள் குவித்து மலைக்க வைத்துள்ளார். இவரது ஸ்ட்ரைக் ரேட் 237.30 ஆகும். தற்போது ஆரஞ்சு தொப்பியைத் தன்வசம் வைத்துள்ள இவர், இறுதிப்போட்டியில் சுப்மன் கில் அல்லது சாய் சுதர்சன் பெரிய இன்னிங்ஸ் ஆடவில்லை என்றால், இந்த சீசனில் அதிக ரன் எடுத்த வீரர் என்ற பெருமையை 15 வயதிலேயே பெறுவார்.
குஜராத் வெற்றி
215 ரன்கள் என்ற கடினமான இலக்கை விரட்டிய குஜராத் அணிக்கு கேப்டன் சுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன் ஜோடி சிம்ம சொப்பனமாக விளங்கியது. இருவரும் இணைந்து 167 ரன்கள் சேர்த்து வெற்றியை உறுதி செய்தனர். கில் 53 பந்துகளில் 104 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். சாய் சுதர்சன் 58 ரன்கள் எடுத்தார். 18.4 ஓவர்களில் இலக்கை எட்டிய குஜராத், அகமதாபாத்தில் நடைபெறும் பிரம்மாண்ட இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் மோதவுள்ளது.


Click it and Unblock the Notifications
