15 வயது சிறுவன் என்றும் பாராமல் வைபவ் உடம்பை குறிவைத்து தாக்கிய குஜராத் பவுலர்கள்.. கொந்தளித்த பதான்
சண்டிகர்: 2026 ஐபிஎல் தொடரின் இரண்டாவது தகுதிச் சுற்றுப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியை வீழ்த்த குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சாளர்கள் கையாண்ட 'பாடி லைன்' யுத்தி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கொந்தளித்த இர்ஃபான் பதான்
நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் அணிக்காக அதிரடியாக விளையாடிய வைபவ் சூர்யவன்ஷியை கட்டுப்படுத்த முடியாமல் குஜராத் பந்துவீச்சாளர்கள் திணறினர். உலகின் முன்னணி வேகப் பந்துவீச்சாளரான ககிசோ ரபாடா வீசிய 14-வது ஓவரில், பந்து பலமாக வைபவ்வின் ஹெல்மெட்டைத் தாக்கியது. இதனால் மைதானத்தில் பதற்றம் நிலவியது. அவருக்கு மூளை அழற்சி ஏற்பட்டுள்ளதா? அவரால் தொடர்ந்து பேட்டிங் செய்ய முடியுமா? என பரிசோதனை செய்த பின்னரே வைபவ் தொடர்ந்து பேட்டிங் செய்தார்.

இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட இர்ஃபான் பதான், "15 வயது சிறுவனைத் தடுக்க அவனது உடலைத் தாக்கும் வகையில் பந்துவீசுவது எனக்குச் சரியாகத் தோன்றவில்லை. அவர் பெரிய வீரர்களுடன் விளையாடுகிறார் என்பது உண்மைதான், ஆனால் என்னுள் இருக்கும் ஒரு 'தந்தை' இதை ஏற்க மறுக்கிறார்" எனத் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
ரபாடா, முகமது சிராஜ், ஜேசன் ஹோல்டர் என அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளர்கள் இருந்தும், ஒரு சிறுவனின் விக்கெட்டை எடுக்க அவர்கள் திணறியது குஜராத் அணியின் பலவீனத்தைக் காட்டியது. 153 கி.மீ வேகத்தில் வந்த ரபாடாவின் பந்தையே வைபவ் சிக்ஸருக்குப் பறக்கவிட்டார். ஹெல்மெட்டில் அடிவாங்கிய அடுத்த ஓவரிலேயே சிராஜ் வீசிய பந்தையும் சிக்ஸராக மாற்றினார். 15 வயதிலேயே ஒரு வீரர் உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்களுக்கு இவ்வளவு நெருக்கடி கொடுப்பது கிரிக்கெட் உலகையே ஆச்சரியப்பட வைத்துள்ளது. வைபவ் 47 பந்துகளில் 96 ரன்கள் குவித்து அசத்தினார்.
கில்லின் அபார சதம்
ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்ணயித்த 215 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி ஆடிய குஜராத் அணிக்கு கேப்டன் சுப்மன் கில் நங்கூரமிட்டு ஆடினார். ஆரம்பம் முதலே அதிரடி காட்டிய கில், வெறும் 47 பந்துகளில் சதம் விளாசினார். சாய் சுதர்சனுடன் இணைந்து சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்த அவர், 104 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஐபிஎல் பிளே-ஆப் போட்டிகளில் 2 சதங்கள் அடித்த ஒரே வீரர் என்ற சாதனையையும் கில் படைத்தார்.
இறுதியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 18.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் ராஜஸ்தான் அணியின் ஐபிஎல் கோப்பை கனவு கலைந்தது. மே 31 அன்று அகமதாபாத்தில் நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் குஜராத் டைட்டன்ஸ் மோதவுள்ளது. 15 வயது சிறுவன் வைபவ்வின் போராட்டமும், கில்லின் அதிரடி சதமும் இந்தப் போட்டியை ஒரு மறக்க முடியாத ஆட்டமாக மாற்றியது.


Click it and Unblock the Notifications
