IPL 2026: “பிட்ச் நல்லாத்தான் இருந்துச்சு ஆனா..”.. சிஎஸ்கே-விடம் அடி வாங்கிய பின் ஹர்திக் பேச்சு
மும்பை: வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில், யாரும் எதிர்பார்க்காத வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 103 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை துவம்சம் செய்துள்ளது. ஐபிஎல் வரலாற்றிலேயே மும்பை அணி சந்தித்த மிக மோசமான தோல்வியாக இது பதிவாகியுள்ள நிலையில், இந்த படுதோல்விக்கு காரணம் என்ன என்பது குறித்து அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மனம் திறந்து பேசியுள்ளார். தோல்விக்கான காரணத்தை அவர் பிட்ச் மீது போடாமல், தனது அணியின் பேட்டிங் வரிசையை விமர்சித்து இருக்கிறார்.
முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தாலும், சஞ்சு சாம்சன் என்ற ஒற்றை மனிதர் மும்பை பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். 54 பந்துகளில் 101 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அவரது அதிரடியால், சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 207 ரன்கள் என்ற இமாலய இலக்கை எட்டியது. கடினமான ஆடுகளத்தில் சஞ்சு சாம்சன் சதம் அடித்தது சிஎஸ்கே ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.

பின்னர் 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு, ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. பவர்பிளே ஓவர்களில் அந்த அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது. சிஎஸ்கே அணியின் அகீல் ஹொசைன் அபாரமாகப் பந்துவீசி 17 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி மும்பையை நிலைகுலைத்தார். இதனால் 19 ஓவர்களில் வெறும் 104 ரன்களுக்கே மும்பை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 103 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
தோல்விக்குப் பின் பேசிய மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா, "பவர்பிளே ஓவர்களில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது எங்களுக்குப் பெரும் பின்னடைவாக அமைந்தது. இவ்வளவு பெரிய இலக்கை துரத்தும் போது ஆரம்பத்திலேயே விக்கெட்டுகள் விழுந்தால் மீண்டு வருவது கடினம். பிட்ச் பேட்டிங்கிற்கு கடினமாக மாறிவிட்டதா என்று கேட்கிறார்கள். ஆனால் நான் அப்படிச் சொல்ல மாட்டேன். ஆடுகளம் ஆரம்பத்தில் எப்படி இருந்ததோ அப்படியே தான் கடைசி வரை இருந்தது. பிட்ச் மீது எந்த குறையும் இல்லை, நாங்கள் தான் சரியாகப் பேட்டிங் செய்யவில்லை" என்றார்.
மேலும் பேசிய அவர், "சிஎஸ்கே அணி 207 ரன்கள் எடுத்தது அந்த ஆடுகளத்தில் ஒரு சிறப்பான ஸ்கோர். சஞ்சு சாம்சன் ஒரு அற்புதமான இன்னிங்ஸை ஆடினார். அவர்களுக்குத் தேவையான ரன்களை அவர் சேர்த்துக் கொடுத்தார். இந்தத் தோல்வியிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, அடுத்தப் போட்டிகளில் அணியில் என்னென்ன மாற்றங்கள் செய்ய வேண்டும் என்பது குறித்து ஆலோசிப்போம். மீண்டு வர எங்களுக்குக் கால அவகாசம் உள்ளது" எனத் தெரிவித்தார்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் இந்த மோசமான தோல்வி அந்த அணி ரசிகர்களை மிகுந்த வேதனையில் ஆழ்த்தியுள்ளது. அதே சமயம், 103 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற சிஎஸ்கே அணி புள்ளிப்பட்டியலில் ஐந்தாம் இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications