IPL 2026: சிஎஸ்கே பயிற்சியாளர் பிளெமிங்கை சீண்டிய டெல்லி கோச் பதானி.. தோல்வியால் கிடைத்த பதிலடி
சென்னை: எப்போதும் மற்றவர்களைக் குறை சொல்வதற்கு முன்னால் நாம் என்ன செய்கிறோம்? எப்படி செயல்படுகிறோம்? என்பதைப் பார்க்க வேண்டும். ஆனால், டெல்லி கேபிடல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஹேமங் பதானிக்கு இது இப்போது கசப்பான பாடமாக மாறியிருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங்கின் திறமையைக் கேள்வி எழுப்பிய பதானிக்கு, இப்போது சிஎஸ்கே ரசிகர்கள் முதல் முன்னாள் வீரர்கள் வரை அனைவரும் சேர்ந்து சமூக வலைதளங்களில் 'தரமான' பதிலடி கொடுத்து வருகின்றனர்.
நடப்பு 2026 ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான இரண்டு லீக் போட்டிகளிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்று 'கிளீன் ஸ்வீப்' செய்துள்ளது. குறிப்பாக டெல்லியில் நடைபெற்ற நேற்றைய போட்டியில் சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடி 87 ரன்கள் குவித்து டெல்லி அணியைத் துவம்சம் செய்தார். இந்தத் தோல்விக்குப் பிறகுதான், 2024-ம் ஆண்டு ஹேமங் பதானி பேசிய ஒரு பழைய வீடியோவை சிஎஸ்கே ரசிகர்கள் தேடி எடுத்து பரப்பி வருகின்றனர்.

அந்த வீடியோவில் ஸ்டீபன் பிளெமிங்கின் பயிற்சியாளர் தகுதி குறித்துப் பதானி கடுமையாகப் பேசியிருந்தார். "பிளெமிங் ஒரு சிறந்த பயிற்சியாளர் என்றால் ஏன் ஐபிஎல் தவிர மற்ற தொடர்களில் (SA20, MLC) வெற்றி பெறவில்லை? தோனி என்ற ஒரு மாபெரும் சக்தி அவரிடம் இருப்பதால் மட்டும்தான் சிஎஸ்கே ஜெயிக்கிறது. தோனி தான் அந்த அணியின் அச்சாணி. பிளெமிங் ஒரு சிறந்த பயிற்சியாளர் என்பதை நான் ஒருபோதும் ஒத்துக்கொள்ள மாட்டேன்" என்று பதானி ஆணவத்துடன் பேசியிருந்தார்.
இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, முன்னாள் இந்திய வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தனது பாணியில் பதானியை விளாசியுள்ளார். "ஹே ஹேமங்.. முதலில் உன்னைப் பார். மத்தவங்களைப் பற்றிப் பேசுவதற்கு முன்னாடி உன் அணி என்ன நிலையில் இருக்கிறது என்று பார். வாழ்க்கையில் அதிகமாகப் பேசக் கூடாது என்று நான் எப்போதும் சொல்வேன். நீ அளவுக்கு அதிகமாகப் பேசிவிட்டாய். இப்போது உன் அணி (டெல்லி கேப்பிடல்ஸ்) மூழ்கிக் கொண்டிருக்கிறது, அதை மூடிக்கொண்டு வேடிக்கை பார்" என்று ஸ்ரீகாந்த் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், "ஸ்டீபன் பிளெமிங் தோனியால்தான் ஜெயிக்கிறார் என்று சொல்ல நீ யார்? நீ என்ன விசேஷமாகச் சாதித்துவிட்டாய்? முதலில் உன் வேலையைச் சரியாகப் பார்" என்றும் ஸ்ரீகாந்த் சாடியுள்ளார். தற்போதைய நிலவரப்படி, டெல்லி கேபிடல்ஸ் அணி 10 போட்டிகளில் விளையாடி 7 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் மிகவும் பின்தங்கியுள்ளது.
சொந்த மண்ணில் விளையாடிய 5 போட்டிகளில் 4-ல் தோல்வியடைந்துள்ள நிலையில், பிளெமிங்கை விமர்சித்த பதானிக்கு இப்போது கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. சிஎஸ்கே ரசிகர்கள் இந்த வெற்றியை "பிளெமிங் 2-0 பதானி" என சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். இதன் மூலம் கிரிக்கெட் களத்தில் மற்றவர்களைத் தாழ்த்திப் பேசுவது அவருக்கே வினையாக முடிந்துள்ளது.


Click it and Unblock the Notifications
