கவுஹாத்தி: 2026 ஐபிஎல் தொடரின் 3-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. கவுகாத்தி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 127 ரன்களுக்குச் சுருண்டது. இதனைத் தொடர்ந்து களம் இறங்கிய ராஜஸ்தான் அணி 12.1 ஓவர்களிலேயே இலக்கை எட்டி மிரட்டியது. இந்த வெற்றிக்குப் பிறகு ராஜஸ்தான் அணியின் இளம் கேப்டன் ரியான் பராக் தனது அணியின் வியூகங்கள் மற்றும் வீரர்கள் குறித்து உற்சாகமாகப் பேசினார்.
வெற்றி குறித்துப் பேசிய ரியான் பராக், "டாஸ் வென்றது எங்களுக்கு மிகப்பெரிய சாதகமாக அமைந்தது. சிவப்பு மண் ஆடுகளம் மற்றும் மழை காரணமாக இருந்த ஈரப்பதம் பந்துவீச்சாளர்களுக்குக் கைகொடுத்தது. எங்களது பந்துவீச்சாளர்கள் திட்டங்களைச் சரியாகச் செயல்படுத்தினர். கேப்டன் பதவிக்காக நான் நிறையத் தயாராகி உள்ளேன், இந்த ஆண்டு கோப்பையை வெல்வதே எங்களது ஒரே இலக்கு. நாங்கள் புத்திசாலித்தனமான கிரிக்கெட்டை விளையாட விரும்புகிறோம், அதற்கு ஏற்றவாறு இன்று வீரர்கள் சூழ்நிலைக்குத் தகவமைத்துக் கொண்டனர்" என்றார்.

பந்துவீச்சாளர்களைப் பாராட்டிய அவர், "வேகப்பந்து வீச்சாளர்கள் மிக வேகமாகப் பந்துவீசினர். கவுகாத்தி மைதானம் ஜட்டு பாய்க்கு (ரவீந்திர ஜடேஜா) மிகவும் சாதகமாக அமைந்தது. பிரிஜேஷ் சர்மாவின் பந்துவீச்சும் பிரமிக்க வைத்தது. அனைவருமே தங்களது பங்களிப்பைச் சரியாக வழங்கினர்" என்று தெரிவித்தார்.
இந்தப் போட்டியில் 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி வெறும் 17 பந்துகளில் 52 ரன்கள் குவித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். அவர் குறித்துப் பேசிய பராக், "வைபவ் வலைப்பயிற்சியில் விளையாடுவதைப் பார்த்தபோதே நாங்கள் மிரண்டு போனோம். அவனிடம் நான் ஒன்றுதான் சொன்னேன், இந்த சீசனில் 14 போட்டிகளிலும் நீ விளையாடுவாய், ஊடகங்களில் வரும் செய்திகளோ அல்லது ஆட்டத்தில் நடக்கும் விஷயங்களோ உன்னைத் தொந்தரவு செய்யக் கூடாது என்று கூறினேன். அவன் இன்று ஆடிய விதம் மகிழ்ச்சி அளிக்கிறது" என்று பாராட்டினார்.

அணியின் பேட்டிங் வரிசை குறித்து விளக்கிய அவர், "இடது மற்றும் வலது கை பேட்ஸ்மேன் கூட்டணி அமைய வேண்டும் என்பதற்காக துருவ் ஜூரலை 3-வது இடத்திலும், ஹெட்மையரை 5-வது இடத்திலும் களம் இறக்கத் தீர்மானித்தோம். இந்தத் திட்டங்கள் இன்று கைகொடுத்தன. இதே போன்ற ஒரு வலுவான வீரர்களுடன் வரும் போட்டிகளிலும் தொடர்ந்து வெற்றி பெறுவோம் என நம்புகிறேன்" என்று மிகுந்த நம்பிக்கையுடன் தெரிவித்தார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக ரியான் பராக் நியமிக்கப்பட்டது விமர்சிக்கப்பட்ட நிலையில் சிஎஸ்கே அணிக்கு எதிராக பெரிய வெற்றியை பெற்று தனது பயணத்தை துவக்கி இருக்கிறார் ரியான் பராக்.