மும்பை: தற்போதைய ஐபிஎல் காலத்தில் விளையாடியிருந்தால், அதிக சம்பளம் வாங்கும் வீரர்களில் ஒருவராகத் தான் திகழ்ந்திருப்பேன் என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சலீல் அன்கோலா தெரிவித்துள்ளார். 1989ல் சச்சின் டெண்டுல்கருடன் அறிமுகம் ஆன இவர், இந்தியாவுக்காக 20 ஒருநாள், ஒரு டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளார். 57 வயதான அன்கோலா, யூடியூப் சேனலில் அளித்த பேட்டியில், தான் ஒருபோதும் அதிகாரப்பூர்வமாக ஓய்வு அறிவிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
1997ல் அணியில் இருந்து நீக்கப்பட்ட பின், முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் அன்கோலா, மீண்டும் களமிறங்க பலமுறை முயற்சித்தும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இது குறித்து பேசிய அவர், "1997ல் தான் அனைத்தும் முடிவுக்கு வந்தது. நான் ஏன் விலகினேன் என்று யாரும் கேட்கவில்லை, தங்கள் மனம்போன போக்கில் எழுதினர்."

"மீண்டும் அணிக்கு வர மூன்று ஆண்டுகள் முயன்றேன். அப்போது சமூக வலைத்தளங்களோ தொடர்புகளோ இல்லை. நான் ஓய்வுபெற்றதாக ஒருபோதும் சொல்லவில்லை. இந்தக் காலத்தில் நான் விளையாடியிருந்தால், ஐபிஎல்-ல் அதிக சம்பளம் வாங்கும் வீரர்களில் ஒருவனாக இருந்திருப்பேன்" என்றார்.
கிரிக்கெட் வாழ்க்கை திடீரென முடிவுக்கு வந்ததும், அன்கோலா நடிப்புத் துறைக்கு மாறினார். பத்தாண்டுகளுக்கும் மேல் கிரிக்கெட்டைப் பார்த்ததில்லை எனவும் அவர் கூறினார். "1999 அல்லது 2000 முதல் 2011 வரை, நான் ஒரு போட்டியைக் கூட பார்க்கவில்லை."
"சேவாக் விளையாடியதையும், கோலியின் அறிமுகத்தையும், ஜாகீர் மற்றும் அகர்கரின் பந்துவீச்சையும் நான் பார்த்ததில்லை. என் சொந்த நண்பர்கள் ஆடுவதையும் காணவில்லை." என மனவருத்தத்தை பகிர்ந்தார்.
"கிரிக்கெட்டைப் பார்க்க எனக்குப் பிடிக்கவில்லை. 'ஏன் எனக்கு இப்படி?' என்று எண்ணினேன். ஏனெனில் வாழ்நாள் முழுதும் அதற்காகவே பயிற்சி செய்தேன், ஆனால் திடீரென எல்லாம் பறிபோனது. நான் அதிகமாகக் குடித்தேன். அது எனக்குத் தப்பிக்கும் வழியாகிவிட்டது," என்றும் அன்கோலா விளக்கினார்.
கராச்சியில் 1989ல் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், சச்சின் டெண்டுல்கருடன் அன்கோலா அறிமுகமானார். கிரிக்கெட் வாழ்க்கைக்குப் பின், 2020ல் மும்பை தேர்வுக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டு மீண்டும் கிரிக்கெட்டிற்குத் திரும்பினார். 2023ல் பிசிசிஐ தேர்வுக் குழு உறுப்பினரானார். அவரது பதவிக்காலம் 2024ல் நிறைவடைந்தது.