IPL 2026: RCB கேப்டனுக்காக கொந்தளித்த கோலி.. ஹோல்டர் கேட்ச் பற்றி கிரிக்கெட் விதிகள் சொல்வது என்ன?
அகமதாபாத்: கிரிக்கெட் களத்தில் தொழில்நுட்பம் எவ்வளவு தான் உச்சத்தை தொட்டாலும், சில அம்பயர்களின் முடிவுகள் பெரும் புயலை கிளப்புவது வாடிக்கையாக உள்ளது. அப்படி ஒரு சர்ச்சை சம்பவம் தான் தற்போது ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் ஆர்சிபி அணிகள் மோதிய லீக் போட்டியில் அரங்கேறியது. ஆர்சிபி கேப்டன் ரஜத் படிதார் அவுட் என அறிவிக்கப்பட்ட விதம், நட்சத்திர வீரர் விராட் கோலியை கொந்தளிக்க செய்தது. ஆனால், கோலி செய்தது சரியா? கிரிக்கெட் விதிமுறைகள் இதற்கு என்ன சொல்கிறது? விரிவாக பார்க்கலாம்.
குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணி விளையாடிய போது, குஜராத் வீரர் ஜேசன் ஹோல்டர் பிடித்த ஒரு கேட்ச் தான் தற்போது பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆர்சிபி அணியின் ரஜத் படிதார் அடித்த பந்தை, பவுண்டரி எல்லையில் நின்று இருந்த ஹோல்டர் பாய்ந்து பிடித்து தரையில் சறுக்கினார். அப்போது அவர் உடல் முழு கட்டுப்பாட்டில் இல்லை என்றும், பந்து தரையில் பட்டதாகவும் ஆர்சிபி தரப்பில் முறையிடப்பட்டது. ஆனால், ரீப்ளேக்களை பார்த்த 3வது அம்பயர் அந்த கேட்ச் முறையாக பிடிக்கப்பட்டது என கருதி உடனடியாக அவுட் என அறிவித்தார்.

அம்பயரின் இந்த முடிவால் மைதானத்தில் சிறிது நேரம் பரபரப்பு தொற்றிக்கொண்டது. ஹோல்டர் கேட்ச் பிடிக்கும் போது பந்து தரையில் பட்டதாக கருதிய விராட் கோலி, கடும் கோபமடைந்தார். உடனடியாக நான்காவது அம்பயரிடம் சென்று அவர் காரசாரமான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவருடன் ஆர்சிபி அணியின் தலைமை பயிற்சியாளர் ஆன்டி பிளவரும் களத்திற்கு வந்து தனது கடும் அதிருப்தியை அம்பயர்களிடம் வெளிப்படுத்தினார்.
இந்த சர்ச்சை முடிவு குறித்து முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா, எம்.சி.சி. கிரிக்கெட் விதிமுறை 33ன் கீழ் உள்ள 33.3வது விதியை சுட்டிக்காட்டி சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பியுள்ளார். ஒரு பீல்டர் பந்தை தொடும் போது கேட்ச் ஆரம்பமாகிறது. அவர் பந்து மற்றும் தனது உடல் அசைவை முழு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் போது தான் ஒரு கேட்ச் முழுமை பெறுகிறது என்பது விதி. ஆனால் ஹோல்டர் கேட்ச் பிடித்து தரையில் சறுக்கிய போது அவரது கட்டுப்பாடு இல்லாமல் பந்து தரையில் உரசியது டிவி காட்சிகளில் தெளிவாக தெரிந்தது. அவர் அவுட் இல்லை என்றாலும், தவறாக அவுட் கொடுக்கப்பட்டுள்ளது என ஆகாஷ் சோப்ரா சுட்டிக்காட்டி உள்ளார்.
இதேபோல் மற்றொரு முன்னாள் இந்திய வீரரான தோதா கணேஷும் அம்பயர்களின் முடிவை கடுமையாக சாடியுள்ளார். இவ்வளவு நவீன தொழில்நுட்பங்கள் பயன்பாட்டில் இருக்கும் இந்த காலத்தில், படிதார் விவகாரம் போன்ற தவறான முடிவுகள் வரக்கூடாது. பந்து தரையில் பட்டது அனைவருக்கும் தெளிவாக தெரிந்தும் அம்பயர்கள் எப்படி அவுட் கொடுத்தார்கள் என்பது இன்னும் புரியாத புதிராகவே உள்ளது. அம்பயர்களின் இந்த ஒரு தவறான முடிவு ஆர்சிபி அணியின் சிறப்பான ஆட்டத்தின் வேகத்தை முற்றிலுமாக சீர்குலைத்து விட்டது என அவர் வேதனை தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
