IPL 2026: ஆர்சிபி முகாமிலும் இல்லை.. ஃபோட்டோ கூட இல்லை.. யாஷ் தயாள் புறக்கணிப்பு? ரசிகர்கள் குழப்பம்
பெங்களூர்: 2026 ஐபிஎல் தொடருக்கான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் பயிற்சி முகாம் பெங்களூருவில் கடந்த மார்ச் 20 அன்று தொடங்கியது. இதில் அந்த அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் பங்கேற்கவில்லை. மேலும், ஆர்சிபி அணிப் பேருந்தில் உள்ள வீரர்களின் படங்களிலும் அவரது முகம் இடம்பெறவில்லை. இதனால் அவர் அணியிலிருந்து நீக்கப்பட உள்ளாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
யாஷ் தயாள் மீது இரண்டு வெவ்வேறு மாநிலங்களில் கடுமையான பாலியல் குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளன. 2025 ஆம் ஆண்டின் மத்தியில், திருமண ஆசை காட்டி ஏமாற்றியதாக காசியாபாத்தில் அவர் மீது முதல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதற்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் அவருக்கு இடைக்கால முன்ஜாமீன் வழங்கியது. அதைத் தொடர்ந்து, ஜெய்ப்பூரில் ஒரு சிறுமியிடம் அத்துமீறியதாக போக்சோ சட்டத்தின் கீழ் அவர் மீது மற்றொரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கிலும் அவர் 2026 ஜனவரி மாதத்தில் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் இடைக்கால முன்ஜாமீன் பெற்றார்.

5 கோடி ரூபாய் ஒப்பந்தம்
இது போன்ற கடுமையான சட்ட சிக்கல்கள் இருந்தபோதிலும், 2025 ஐபிஎல் தொடரில் ஐபிஎல் கோப்பை வென்ற ஆர்சிபி அணி, 2026 தொடருக்காக அவரை 5 கோடி ரூபாய்க்கு தக்கவைத்தது. பொதுவாக இதுபோன்ற குற்றச்சாட்டுகள் எழும்போது அணிகள் அந்த வீரர்களை நீக்குவது வழக்கம். ஆனால், ஆர்சிபி அணி அவரைத் தக்கவைத்ததால் ரசிகர்கள் மத்தியில் கடும் விமர்சனங்கள் எழுந்தன. இது குறித்து ஆர்சிபி அணி நிர்வாகம் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
தலைமறைவான யாஷ் தயாள்?
2025 ஐபிஎல் இறுதிப் போட்டிக்குப் பிறகு யாஷ் தயாள் எந்தவொரு கிரிக்கெட் போட்டியிலும் விளையாடவில்லை. உள்ளூர் போட்டிகளிலும் அவர் பங்கேற்கவில்லை. அவர் தனது செல்போன் எண்ணை மாற்றிவிட்டதால், உத்தரபிரதேச கிரிக்கெட் சங்க அதிகாரிகளாலோ, அவரது பயிற்சியாளராலோ கூட அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை என கூறப்படுகிறது.
இதற்கிடையே, 2026 பிப்ரவரி 4 அன்று யாஷ் தயாளைத் திருமணம் செய்துகொண்ட ஸ்வேதா புண்டிர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் யாஷ் தயாள் வலைப்பயிற்சியில் ஈடுபடுவது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. ஆனால், அது பெங்களூருவில் நடக்கும் ஆர்சிபி பயிற்சி முகாம் இல்லை என்பது உறுதியாகியுள்ளது. ஒருவேளை யாஷ் தயாள் விளையாடவில்லை என்றால், ஆர்சிபி அணி அவரை நீக்கிவிட்டு வேறு வீரரை தேர்வு செய்யுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications