IPL 2026: ரெய்னா சாதனை தப்பியது.. புதிய சரித்திரம் படைத்த ஜோஸ் பட்லர்.. 600 டி20 சிக்சர்
டெல்லி: 2026 ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர் ஜோஸ் பட்லர் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார். டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 3வது வீரராக களமிறங்கிய அவர் வெறும் 27 பந்துகளில் 52 ரன்கள் விளாசி அசத்தினார். இதில் 3 பவுண்டரி மற்றும் 5 இமாலய சிக்சர்கள் அடங்கும்.
இந்த அதிரடி ஆட்டத்தின் மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் 600 சிக்சர்களை கடந்த முதல் வெஸ்ட் இண்டீஸ் அல்லாத வீரர் என்ற மாபெரும் சாதனையை இங்கிலாந்தின் ஜோஸ் பட்லர் படைத்துள்ளார். இதுவரை 496 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார்.
பட்லருக்கு முன்னதாக உலகளவில் 4 வீரர்கள் மட்டுமே 600 சிக்சர்களுக்கு மேல் அடித்துள்ளனர். அந்த 4 பேருமே வெஸ்ட் இண்டீஸ் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஜாம்பவான் கிறிஸ் கெயில் 463 போட்டிகளில் 1056 சிக்சர்களுடன் முதலிடத்தில் உள்ளார்.
அவரைத் தொடர்ந்து கீரன் பொல்லார்ட் 982 சிக்சர்களும், ஆண்ட்ரே ரசல் 784 சிக்சர்களும், நிக்கோலஸ் பூரன் 712 சிக்சர்களும் அடித்துள்ளனர். தற்போது இந்த சிக்சர் மன்னர்கள் பட்டியலில் 5வது வீரராக பட்லர் இணைந்துள்ளார். அலெக்ஸ் ஹேல்ஸ் 595, காலின் மன்ரோ 582, மேக்ஸ்வெல் 571 மற்றும் இந்தியாவின் ரோஹித் சர்மா 554 சிக்சர்களுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

இதுமட்டுமின்றி ஐபிஎல் தொடரில் தொடக்க வீரராக இல்லாமல் களமிறங்கி, முதல் 6 ஓவர்களுக்குள் 5 சிக்சர்களை விளாசிய 2வது வீரர் என்ற பெருமையையும் பட்லர் பெற்றுள்ளார். முகேஷ் குமார் மற்றும் அக்சர் படேல் பந்துவீச்சில் பவர்பிளே ஓவர்களிலேயே அவர் இந்த 5 சிக்சர்களை பறக்கவிட்டார்.
இதற்கு முன் கடந்த 2014ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய சுரேஷ் ரெய்னா, பஞ்சாப் அணிக்கு எதிராக பவர்பிளேயில் 6 சிக்சர்களை அடித்ததே இப்போதுவரை சாதனையாக உள்ளது. தற்போது பட்லர் 5 சிக்சர்கள் அடித்ததன் மூலம் ரெய்னாவின் அந்த வரலாற்று சாதனை நூலிழையில் தப்பியது. கடந்த 2025 மெகா ஏலத்தில் குஜராத் அணி பட்லரை 15.75 கோடி ரூபாய்க்கு வாங்கியது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications