IPL 2026: தெறிக்கவிட்ட ரபாடா.. உலக அளவில் மாபெரும் சாதனை.. இது பேட்டர் கேம்னு யார் சொன்னா?
தர்மசாலா: தென் ஆப்பிரிக்காவின் அதிரடி வேகப்பந்துவீச்சாளர் ககிசோ ரபாடா, ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் தனித்துவமான புதிய சாதனையைப் படைத்துள்ளார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான விறுவிறுப்பான குவாலிஃபையர் 1 போட்டியில், ஒரே ஐபிஎல் சீசனில் மூன்று முறை 25 விக்கெட்டுகளை வீழ்த்திய உலகின் முதல் பந்துவீச்சாளர் என்ற பெருமையை அவர் எட்டினார். இது உலக கிரிக்கெட் அரங்கில் இதுவரை நிகழாத அரிய மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லாகக் கருதப்படுகிறது.
தரம்சாலாவில் உள்ள ஹிமாச்சலப் பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சுக்கு ரபாடா தலைமை தாங்கினார். ஐபிஎல் 2026 சீசனில் தனது 25வது விக்கெட்டைப் பூர்த்தி செய்ய அவருக்கு ஒரு விக்கெட் மட்டுமே தேவைப்பட்டது. தனது முதல் ஓவரின் ஆறாவது பந்தில் வெங்கடேஷ் ஐயரை வீழ்த்திய அவர், அந்த வரலாற்று மைல்கல்லை எட்டினார். நடப்பு சீசனில் இதுவரை 15 போட்டிகளில் பங்கேற்று ரபாடா மொத்தம் 25 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

ரபாடா ஐபிஎல் வரலாற்றில் ஏற்கெனவே இரண்டு முறை 25 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தியுள்ளார். 2019 சீசனில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக 12 போட்டிகளில் 25 விக்கெட்டுகளை வீழ்த்திய அவர், 2020 சீசனில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் அதே அணிக்காக 17 போட்டிகளில் களமிறங்கி 30 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். வெவ்வேறு அணிகளுக்காக ஒரு சீசனில் 25+ விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பந்துவீச்சாளர் என்ற பெருமையும் தென் ஆப்பிரிக்க நட்சத்திர பந்துவீச்சாளரான ரபாடாவுக்குச் சொந்தம். ஆகும்.
இந்த வரலாற்றுச் சாதனைகளுடன், ஐபிஎல் சீசனில் பவர்பிளேயில் (முதல் ஆறு ஓவர்கள்) அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய புதிய சாதனையும் ரபாடாவின் வசம் வந்துள்ளது. ஐபிஎல் 2026 சீசனில் இதுவரை அவர் பவர்பிளேயில் மட்டும் 18 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டியுள்ளார். இந்த சாதனையை அடைய, வெங்கடேஷ் ஐயரின் விக்கெட் ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. பெங்களூரு இன்னிங்ஸின் இரண்டாவது ஓவரில் ஐயரின் விக்கெட்டை அவர் நயமாகக் கைப்பற்றினார்.
முன்னதாக, ஒரு ஐபிஎல் சீசனில் பவர்பிளேயில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய சாதனை, குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக 2023 சீசனில் 17 விக்கெட்டுகளை வீழ்த்திய முகமது ஷமியிடம் இருந்தது. இந்த பட்டியலில் ரபாடா, ஷமிக்கு அடுத்தபடியாக மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 2013 மற்றும் 2020 சீசன்களில் தலா 16 விக்கெட்டுகளை வீழ்த்திய மிட்செல் ஜான்சன் மற்றும் ட்ரென்ட் போல்ட் ஆகியோர் உள்ளனர்.
போட்டியில் வெங்கடேஷ் ஐயர் 7 பந்துகளில் 19 ரன்கள் (3 பவுண்டரிகள், 1 சிக்ஸர்) எடுத்துள்ள நிலையில், ஷுப்மன் கில் வசம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இந்த விக்கெட் உட்பட ரபாடாவின் இந்த 25 விக்கெட்டுகள், ஐபிஎல் 2026 பர்ப்பிள் கேப் பந்தயத்தில் அவரை முன்னணியில் நிலைநிறுத்தியது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவின் புவனேஷ்வர் குமாரை விட ஒரு விக்கெட் கூடுதலாக எடுத்து, ரபாடா தற்போது முதலிடத்தில் இருந்தார். ஆனால், மீண்டும் புவனேஸ்வர் குமார் பந்துவீச்சில் விக்கெட் எடுத்து பர்பிள் தொப்பியை மீண்டும் வென்றார்.


Click it and Unblock the Notifications

