IPL 2026: பிளே-ஆஃப் வாய்ப்பு காலி.. 3 ஐபிஎல் கோப்பை வென்ற கொல்கத்தா பிளே-ஆஃப் போக முடியுமா?
அகமதாபாத்: 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அஜிங்க்யா ரகானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. விளையாடிய 6 போட்டிகளில் 5 தோல்விகளைச் சந்தித்திருக்கும் கொல்கத்தா அணி, இனி பிளே-ஆஃப் செல்வது மிக, மிகக் கடினமான விஷயமாக மாறி உள்ளது. அந்த அணிக்கு இன்னும் ஒரு 'மேஜிக்' வாய்ப்பு மிச்சமுள்ளது. அந்த கணக்கு மிகவும் கடினமான ஒன்றாக உள்ளது.
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக அகமதாபாத்தில் நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணியில், கேமரூன் கிரீன் அதிரடியாக 79 ரன்கள் குவித்தார். இருந்தபோதிலும், மற்ற வீரர்கள் சொதப்பியதால் அந்த அணி 180 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து ஆடிய குஜராத் அணியில் கேப்டன் சுப்மன் கில் பொறுப்பாக விளையாடி 86 ரன்கள் சேர்த்து 19.4 ஓவர்களில் அணியை வெற்றி பெறச் செய்தார். இதன் மூலம் குஜராத் அணி தனது 3-வது தொடர் வெற்றியைப் பதிவு செய்த நிலையில், கொல்கத்தா அணி இன்னும் ஒரு வெற்றிக்காகக் காத்துக் கிடக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

கணித ரீதியான வாய்ப்பு
கொல்கத்தா அணி இதுவரை 6 போட்டிகளில் விளையாடி 1 புள்ளியை மட்டுமே பெற்றுள்ளது. பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டி மழையினால் ரத்தானதால் அந்த 1 புள்ளி கிடைத்தது. தற்போது நிகர ரன் ரேட் -1.149 ஆகக் குறைந்து கடைசி இடத்தில் இருக்கும் கொல்கத்தா அணிக்கு இன்னும் 8 போட்டிகள் மீதமுள்ளன.
8-ல் 8 வெற்றி: ஒருவேளை மீதமுள்ள 8 போட்டிகளிலும் கொல்கத்தா அணி வெற்றி பெற்றால், அதன் மொத்த புள்ளிகள் 17 ஆக உயரும். இது அந்த அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு நேரடியாகச் செல்ல போதுமானதாகும்.
7 வெற்றி: ஒரு போட்டியில் தோல்வியடைந்து 7 போட்டிகளில் வென்றால் 15 புள்ளிகள் கிடைக்கும். மற்ற அணிகளின் முடிவுகளைப் பொறுத்து இதுவும் பிளே-ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யலாம்.
6 வெற்றி: 2 போட்டிகளில் தோற்று 6-ல் வென்றால் 13 புள்ளிகள் மட்டுமே கிடைக்கும். இந்தச் சூழலில் மற்ற அணிகளின் புள்ளிகள் மற்றும் ரன் ரேட் அடிப்படையில் மட்டுமே கொல்கத்தா முன்னேற முடியும். இதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு.
தொடர் தோல்விகளால் துவண்டுள்ள கொல்கத்தா அணி, தனது அடுத்த 8 போட்டிகளிலும் வென்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்குச் செல்ல முடியும் என்ற இக்கட்டான நிலையில் உள்ளது. இந்த இமாலயச் சாதனையை கேப்டன் ரகானே படைப்பாரா? என்று பார்க்கலாம். .


Click it and Unblock the Notifications