IPL 2026: 5 சூப்பர் ஓவரில் டக் அவுட் ஆன இவரையா பேட்டிங் செய்ய அனுப்புனீங்க? LSG-யை வெளுத்த ரசிகர்கள்
லக்னோ: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி, கடைசி நிமிடம் வரை ரசிகர்களின் இதய துடிப்பை எகிற வைத்தது. ஆனால், வெற்றிக்கு மிக அருகில் சென்ற லக்னோ அணி, சூப்பர் ஓவரில் செய்த ஒரு வரலாற்றுத் தவறால் படுதோல்வியைச் சந்தித்தது. அதிரடி வீரர் என்று நம்பி களமிறக்கப்பட்ட வீரர், லக்னோ அணியின் வெற்றியை தாரை வார்த்தது இப்போது சமூக வலைதளங்களில் மிகப்பெரிய விவாதத்தை கிளப்பியுள்ளது.
லக்னோவில் உள்ள ஏகானா மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், முதலில் ஆடிய கொல்கத்தா மற்றும் லக்னோ ஆகிய இரண்டு அணிகளுமே 20 ஓவர்கள் முடிவில் சரியாக 155 ரன்கள் எடுத்தன. இதனால் போட்டி சமனில் முடிந்து, வெற்றியாளரைத் தீர்மானிக்க சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது. லக்னோ அணிக்கு முதல் 20 ஓவர்களில் சரியாக ஆடாத நிக்கோலஸ் பூரன் மீது கேப்டன் ரிஷப் பண்ட் நம்பிக்கை வைத்து, அவரை சூப்பர் ஓவரில் பேட்டிங் செய்ய அழைத்தார்.

ஆனால், ரசிகர்களின் பயம் நிஜமானது. சுனில் நரேன் வீசிய சூப்பர் ஓவரின் முதல் பந்திலேயே நிக்கோலஸ் பூரன் போல்ட் ஆகி அதிர்ச்சி அளித்தார். அதிரடி வீரர் என்ற பிம்பம் இவருக்கு இருந்தாலும், சூப்பர் ஓவரில் இவரது புள்ளி விவரங்கள் மிகவும் மோசமாக உள்ளன. இதனைத் தொடர்ந்து 3வது பந்தில் எய்டன் மார்க்ரம் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழக்க, லக்னோ அணி வெறும் 1 ரன் மட்டுமே எடுத்தது. அடுத்து ஆடிய கொல்கத்தா அணி, முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து எளிதாக வெற்றி பெற்றது.
நிக்கோலஸ் பூரணை ஏன் சூப்பர் ஓவர் ஆட அனுப்பினீர்கள் என்று ரசிகர்கள் இப்போது லக்னோ நிர்வாகத்தைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதற்கு வலுவான காரணமும் உள்ளது. இதுவரை 5 சூப்பர் ஓவர்களில் விளையாடியுள்ள பூரன், மொத்தமாகவே 1 ரன் தான் எடுத்துள்ளார். இதில் 4 முறை ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆகி ஆட்டமிழந்துள்ளார். அதிலும் குறிப்பாக 3 முறை தான் சந்தித்த முதல் பந்திலேயே 'கோல்டன் டக்' ஆகி வெளியேறியுள்ளார். இப்படிப்பட்ட ஒரு வீரரைத் தேடிப் பிடித்து சூப்பர் ஓவர் வாய்ப்பு கொடுத்தது ஏன் என்பதே ரசிகர்களின் கேள்வி.
மேலும் 2026 ஐபிஎல் தொடரில் பூரனின் பேட்டிங் செயல்பாடு மிகவும் பாதாளத்தில் உள்ளது. இதுவரை 8 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 101 பந்துகளைச் சந்தித்து வெறும் 82 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இவரது ஸ்ட்ரைக் ரேட் 81 ஆக இருப்பது ஒரு டி20 வீரருக்கு மிகப்பெரிய அவமானமாகப் பார்க்கப்படுகிறது.
அணியில் இருந்து நீக்கப்பட வேண்டிய நிலையில் இருக்கும் ஒருவருக்கு, போட்டியின் முக்கிய கட்டத்தில் வாய்ப்பு கொடுத்து லக்னோ அணி வெற்றியை நழுவவிட்டுள்ளது. இந்த மோசமான ஆட்டத்திற்குப் பிறகு, அடுத்த போட்டியில் பூரன் பிளேயிங் லெவனில் இடம் பெறுவது சந்தேகம் தான் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications