"துணிச்சலாக ஆடி.. 2 ஓவர்களில் எங்கள் வெற்றியை பறித்தார் முகுல்”.. KKR தோல்விக்கு முன் ரஹானே புலம்பல்
கொல்கத்தா: லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு பேசிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் அஜிங்க்யா ரஹானே, இளம் வீரர் முகுல் சவுத்ரியின் துணிச்சலான ஆட்டமே தங்களின் வெற்றியை பறித்துவிட்டதாக கூறினார். ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடந்த ஆட்டத்தில், கொல்கத்தா அணி நிர்ணயித்த 182 ரன்கள் இலக்கை லக்னோ அணி கடைசி பந்தில் எட்டிப் பிடித்தது.
இந்தத் தோல்வி குறித்துப் பேசிய ரஹானே, "இந்தத் தோல்வியை ஏற்றுக்கொள்வது கடினம் தான். ஆனால் எங்கள் வீரர்கள் விளையாடிய விதத்தை எண்ணி பெருமைப்படுகிறேன். 18 ஓவர்கள் வரை ஆட்டம் எங்கள் கட்டுப்பாட்டில் தான் இருந்தது. ஆனால் கடைசி 2 ஓவர்களில் திட்டங்களைச் சரியாகச் செயல்படுத்த முடியாமல் போனது கிரிக்கெட்டில் சகஜம் தான்" என்றார்.

லக்னோ அணியின் இளம் வீரர் முகுல் சவுத்ரியின் அதிரடி குறித்துப் பேசிய அவர், "முகுல் சவுத்ரியின் இன்னிங்ஸ் தான் ஆட்டத்தின் முடிவைத் தீர்மானித்தது. அவர் ஆடிய ஷாட்கள் அனைத்தும் மிகவும் துணிச்சலானவை. லக்னோ அணிக்கு இழப்பதற்கு எதுவுமில்லை என்ற நிலை இருந்தபோது, கடைசி 2 ஓவர்களில் 30 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது அவர் ஒவ்வொரு பந்தையும் அதிரடியாக எதிர்கொண்டார். சில பந்துகள் மிகச் சிறப்பாக வீசப்பட்ட போதிலும், அவர் அதனை அற்புதமாக கையாண்டார். அவரது ஆட்டம் பிரமிக்க வைத்தது" எனப் பாராட்டினார்.
ஆடுகளத்தின் தன்மை குறித்துப் பேசிய ரஹானே, "இந்த ஆடுகளத்தில் 180 முதல் 185 ரன்கள் என்பது நல்ல ஸ்கோர் தான். ரகுவன்ஷி, கேமரூன் கிரீன் மற்றும் ரோவ்மன் பவல் ஆகியோரின் பங்களிப்பால் எங்களால் இந்த இலக்கை எட்ட முடிந்தது. மெதுவான பந்துகள் ஆடுகளத்தில் சற்று நின்று வந்ததால் பெரிய ஷாட்கள் அடிப்பது எளிதாக இல்லை. எங்கள் பந்துவீச்சாளர்களும் சிறப்பாகவே செயல்பட்டனர். பீல்டிங்கில் ஓரிரு தவறுகள் நடந்திருக்கலாம், மற்றபடி பந்துவீச்சாளர்கள் மீது குறையில்லை" எனக் கூறினார்.
கடைசி ஓவரில் ஏற்பட்ட நெருக்கடி குறித்து விளக்கிய அவர், "ஐபிஎல் விதிகளின்படி குறிப்பிட்ட நேரத்திற்குள் ஓவர்களை வீசி முடிக்காததால், நேரக் கட்டுப்பாடு காரணமாக கடைசி ஓவரில் 5 பீல்டர்களை உள்வட்டத்திற்குள்ளேயே நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. கடைசி ஓவரை வீசும் பந்துவீச்சாளருக்கு இது கூடுதல் நெருக்கடியைத் தரும். அந்தச் சூழலில் பந்துவீசுவது மிகவும் கடினம்" எனத் தெரிவித்தார்.
இந்தத் தோல்வியின் மூலம் கொல்கத்தா அணி புள்ளிப்பட்டியலில் பின்னடைவைச் சந்தித்தாலும், வீரர்களின் போராட்ட குணத்தை ரஹானே வெகுவாகப் புகழ்ந்து பேசினார். தற்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. அந்த அணி ஒரு வெற்றி கூட பெறாமல் மழையால் தடைபட்ட போட்டியால் கிடைத்த 1 புள்ளியுடன் உள்ளது.


Click it and Unblock the Notifications