IPL 2026: 47 பந்துகளில் கேஎல் ராகுல் சதம்.. பஞ்சாப் பந்துவீச்சை கொத்து பரோட்டா போட்ட டெல்லி பேட்டிங்
டெல்லி: ஐபிஎல் தொடரின் இன்றைய பரபரப்பான போட்டியில், டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் கே.எல். ராகுல் தனது அதிரடியான ஆட்டத்தால் மைதானத்தை அதிர வைத்துள்ளார். பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான இந்தப் போட்டியில், ராகுல் தனது அபாரமான சதத்தைப் பதிவு செய்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்த டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு ராகுல் மிகச்சிறந்த தொடக்கத்தை அளித்தார். வெறும் 47 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட ராகுல், மைதானத்தின் நாலாபுறமும் பந்துகளை சிதறடித்தார். அவரது இந்த இன்னிங்ஸில் 12 பவுண்டரிகளும், 5 பிரம்மாண்ட சிக்ஸர்களும் அடங்கும். இது இந்த நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் சதமாகும், மேலும் அவரது ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் இது ஆறாவது சதமாகும்.

ராகுல் முதல் அரைசதத்தை 26 பந்துகளிலும், அடுத்த 50 ரன்களை 21 பந்துகளிலும் அடித்துள்ளார். இந்த தொடரில் முழுவதும் தடுமாறிய நிலையில், தற்போது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். ராகுலுக்கு பக்கபலமாக நின்ற நிதிஷ் ராணா, மிக நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 72 ரன்களை குவித்து வலுவான பார்ட்னர்ஷிப் அமைத்தார். இவர்களின் அதிரடி பேட்டிங்கால், டெல்லி அணி பஞ்சாப் பந்துவீச்சாளர்களைத் திணறடித்தது.
கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்ற ராகுல் 67 பந்துகளில் 152 ரன்கள் விளாசினார். இதில் 9 சிக்சர்கள், 16 பவுண்டரிகள் அடங்கும். புள்ளிப்பட்டியலில் ஆறாவது இடத்தில் இருக்கும் டெல்லி அணி, முதலிடத்தில் உள்ள வலிமையான பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் களமிறங்கியது. முந்தைய போட்டியில் விளையாடிய அதே வீரர்களுடன் இரு அணிகளும் மாற்றங்கள் ஏதுமின்றி களமிறங்கியுள்ளன. ராகுலின் இந்த அதிரடி ஆட்டம், டெல்லி அணிக்கு பிளே-ஆஃப் சுற்றிற்கான வாய்ப்பை பிரகாசமாக்கியுள்ளது.
தற்போது ராகுலின் இந்த இன்னிங்ஸ் சமூக வலைதளங்களில் கிரிக்கெட் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி அணி 20 ஓவரில் 264 ரன்களை குவித்து அசத்தியுள்ளது.. இந்த பிரம்மாண்ட இலக்கை பஞ்சாப் கிங்ஸ் எப்படி எதிர்கொள்ளப்போகிறது என்பதுதான் தற்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது.


Click it and Unblock the Notifications