IPL 2026: இவங்க 2 பேருக்கும் யார் மோசமான பேட்ஸ்மேன் என்பதில் போட்டி.. ஸ்ரீகாந்த் விமர்சனம்
சென்னை: 2026 ஐபிஎல் தொடரில் மிக மோசமாக விளையாடி வரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரியான் பராக் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் அஜிங்க்யா ரஹானே ஆகிய இருவரில் யார் 'மிக மோசமான பேட்ஸ்மேன்' ஆவது என்பதில் கடும் போட்டி நிலவுவதாக இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கடுமையாக விமர்சித்துள்ளார். இவரது இந்த அதிரடியான கருத்து ஐபிஎல் கிரிக்கெட் வட்டாரத்தில் தற்போது பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணி தான் விளையாடிய முதல் 4 போட்டிகளில் வென்று, அடுத்த 2 போட்டிகளில் தோல்வியைத் தழுவி புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. அணி சற்று வலுவாக இருந்தாலும், கேப்டன் ரியான் பராக் பேட்டிங்கில் தொடர்ந்து படுமோசமாக சொதப்பி வருகிறார். இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 122 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் வெறும் 61 ரன்களை மட்டுமே எடுத்து ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றம் அளித்துள்ளார். அதேபோல, கொல்கத்தா அணியின் கேப்டன் ரஹானே 7 போட்டிகளில் 152 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இவரது தலைமையிலான கொல்கத்தா அணி 7 போட்டிகளில் 1 வெற்றியை மட்டுமே பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடமான 10வது பாதாளத்தில் தவித்து வருகிறது.

இந்த இரு வீரர்களின் மோசமான ஆட்டம் குறித்து தனது யூடியூப் சேனலில் பேசிய முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் இருவரையும் வெளுத்து வாங்கியுள்ளார். அவர் கூறுகையில், "பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என எதிலுமே எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாத ரியான் பராக், மைதானத்தில் ஸ்டைலாக நடந்து செல்வதற்கு மட்டுமே லாயக்கானவர். அவர் ஏதோ ஒரு சீசனில் நன்றாக விளையாடினார், அவ்வளவுதான். இப்போது அவருக்கும் ரஹானேவுக்கும் இடையே யார் மோசமான பேட்ஸ்மேன் என்ற போட்டியே தீவிரமாக நடக்கிறது" என மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், புள்ளிப்பட்டியலில் தற்போதைய நிலை குறித்தும் தனது கருத்துக்களைப் பகிர்ந்தார். ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ அணி 6 போட்டிகளில் 2 வெற்றி பெற்று 9வது இடத்தில் உள்ளதை சுட்டிக்காட்டிய அவர், "லக்னோ மற்றும் கொல்கத்தா ஆகிய இரு அணிகளுமே ஏறக்குறைய பிளே ஆஃப் வாய்ப்பை இழந்துவிட்டன. இனி இந்த இரண்டு அணிகளும் 9வது மற்றும் 10வது இடங்களுக்குத் தான் அடித்துக்கொள்ள வேண்டும். ஆனால், 7வது இடத்தில் உள்ள மும்பை அணி பெரிய போட்டிகளில் சிறப்பாகச் செயல்படும் திறன் கொண்டது. அவர்கள் நிச்சயம் அபாரமாக மீண்டு வந்து பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவார்கள்" எனத் தெரிவித்தார்.
மேலும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் 3வது வரிசை வீரரான கருண் நாயர் குறித்துப் பேசிய ஸ்ரீகாந்த், "டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் 3வது வரிசையில் மிகப்பெரிய பிரச்சனை உள்ளது. கருண் நாயர் ஒரு டெஸ்ட் போட்டி வீரர். அவரைப் போய் அதிரடியான டி20 கிரிக்கெட்டில் விளையாட வைத்துள்ளனர்" எனக் கூறி டெல்லி அணியின் வீரர் தேர்வையும் கடுமையாகச் சாடியுள்ளார்.


Click it and Unblock the Notifications