சிஎஸ்கே-வை சாய்த்து நிரூபித்து விட்டாய்.. LSG பவுலர் ஆகாஷ் சிங் குறித்து சஞ்சீவ் கோயங்கா நெகிழ்ச்சி
லக்னோ: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தனது அபாரமான பந்துவீச்சால் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்த ஆகாஷ் சிங், விக்கெட்டை வீழ்த்திய பின் செய்த அந்த வினோதமான கொண்டாட்டம் ரசிகர்களை ஈர்த்தது. அவரது பாக்கெட்டில் இருந்த ஒரு ரகசியக் குறிப்பு, மைதானத்தில் இருந்தவர்களை மட்டுமல்ல, லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் சிங், இந்த சீசனில் தனக்குக் கிடைத்த முதல் வாய்ப்பிலேயே சென்னை அணியின் பேட்டிங் வரிசையைச் சிதறடித்தார். பவர்பிளே ஓவர்களில் சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் ஆகியோரை அடுத்தடுத்து வெளியேற்றி அதிர்ச்சி அளித்தார். 4 ஓவர்களில் 26 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளைச் சாய்த்த ஆகாஷ் சிங், ஒவ்வொரு விக்கெட்டை வீழ்த்திய போதும் தனது பாக்கெட்டில் இருந்து ஒரு காகிதத்தை எடுத்து ரசிகர்களிடம் காட்டினார்.

அவர் காட்டிய அந்த காகிதத்தில், "#Akki on fire - Akash knows how to take wickets in T20 game" (அக்கி ஃபார்மில் இருக்கிறார் - டி20 போட்டியில் எப்படி விக்கெட் எடுக்க வேண்டும் என்று ஆகாஷுக்குத் தெரியும்) என எழுதப்பட்டிருந்தது. ஒரு இளம் வீரரின் இந்தத் தன்னம்பிக்கையான கொண்டாட்டம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இதைப் பார்த்த லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா, ஆகாஷ் சிங்கை பாராட்டி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "ஆகாஷ், இன்று இரவு 3 முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தினாய். மிகச்சிறப்பான ஆட்டம். அந்த காகிதக் குறிப்பே அனைத்தையும் சொல்லிவிட்டது. டி20 போட்டியில் விக்கெட்டுகளை எப்படி எடுக்க வேண்டும் என்பதை நீ நிரூபித்துக் காட்டிவிட்டாய். உன்னைக் குறித்துப் பெருமைப்படுகிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.
தனது அதிரடி ஆட்டம் குறித்துப் பேசிய ஆகாஷ் சிங், "எனது மனநிலை எப்போதுமே பெரிய விக்கெட்டுகளை வீழ்த்துவதைப் பற்றியது தான். ஐபிஎல் போன்ற தொடர்களில் நீங்கள் விளையாட மட்டும் வரக்கூடாது, ஆதிக்கம் செலுத்த வர வேண்டும். பேட்டிங் வலிமை அதிகரித்து வரும் இந்தச் சூழலில், நாம் மனதளவிலும் திறமை ரீதியாகவும் ஒரு படி முன்னால் இருக்க வேண்டும். பேட்ஸ்மேன் யார் என்பது எனக்கு முக்கியமில்லை, எனது பந்துவீச்சைச் சரியாகச் செயல்படுத்துவதில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன். பெரிய வீரர்களின் விக்கெட்டை எடுக்கும்போது கிடைக்கும் மகிழ்ச்சியே தனி" என அதிரடியாகத் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications
