IPL 2026: நல்ல பேட்ஸ்மேனை ரன் அவுட்டாக்கிய ஆஸ்திரேலிய வீரர்.. லக்னோ தோல்விக்கு காரணமே இதுதான்
லக்னோ ஏகானா மைதானத்தில் நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 160 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய லக்னோ அணிக்கு முதல் ஓவரிலேயே ஒரு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. லக்னோ அணியின் நம்பிக்கை நட்சத்திரமான ஆயுஷ் பதோனி, தான் சந்தித்த முதல் பந்திலேயே ஒரு ரன் கூட எடுக்காமல் 'ரன்-அவுட்' ஆகி வெளியேறினார். இதற்குக் காரணம் அவருக்கும் சக தொடக்க வீரர் மிட்செல் மார்ஷுக்கும் இடையே ஏற்பட்ட ஒரு தவறான புரிதல்தான். அந்த ஒரு தவறு ஒட்டுமொத்த ஆட்டத்தையும் மாற்றியது. லக்னோ அணியின் தோல்விக்கும் காரணமாக அமைந்தது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்ணயித்த 160 ரன்கள் இலக்கை துரத்திய லக்னோ அணிக்கு மிட்செல் மார்ஷ் மற்றும் ஆயுஷ் பதோனி தொடக்க வீரர்களாகக் களமிறங்கினர். ராஜஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய முதல் ஓவரின் கடைசி பந்தை பதோனி எதிர்கொண்டார். அந்தப் பந்து லெக் ஸ்டம்பை நோக்கி வர, பதோனி அதைத் தடுத்தாட முயன்றார். அப்போது பந்து பேட்டின் உட்புற விளிம்பில் பட்டு லெக் சைட் திசையில் அருகிலேயே உருண்டது. உடனே ஒரு ரன் எடுக்கலாம் என நினைத்து பதோனி பாதி தூரம் ஓடி வந்தார்.

ஆனால், எதிர்முனையில் இருந்த மிட்செல் மார்ஷ் ஓடி வர மறுத்து அங்கேயே நின்றுவிட்டார். இதைக் கவனிப்பதற்குள் மாற்று வீரராகக் களத்தில் இருந்த ரவி சிங் மின்னல் வேகத்தில் ஓடி வந்து பந்தை எடுத்து நேராக விக்கெட்டை நோக்கி அடித்தார். பந்து சரியாக ஸ்டம்பைத் தாக்கியது. பாதி தூரம் வந்துவிட்ட பதோனியால் மீண்டும் தனது இடத்திற்குத் திரும்ப முடியவில்லை. இதனால் ஒரு பந்தை மட்டுமே எதிர்கொண்டு 'கோல்டன் டக்-அவுட்' ஆகி அவர் வேதனையுடன் வெளியேறினார் ஆயுஷ் பதோனி. கடந்த போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிராக 35 ரன்கள் எடுத்து நல்ல ஃபார்மில் இருந்த பதோனிக்கு இது ஒரு கசப்பான அனுபவமாக அமைந்தது.
இந்தத் தொடக்கமே லக்னோ அணிக்கு ஒரு மிகப்பெரிய சறுக்கலாக அமைந்தது. பதோனியைத் தொடர்ந்து கேப்டன் ரிஷப் பன்ட் மற்றும் எய்டன் மார்க்ரம் என வரிசையாக முன்னணி வீரர்கள் ரன் ஏதும் எடுக்காமல் டக்-அவுட் ஆகி வெளியேறி அதிர்ச்சி அளித்தனர். மிட்செல் மார்ஷ் மட்டும் தனி ஆளாகப் போராடி 55 ரன்கள் சேர்த்த போதிலும், மற்ற வீரர்களின் ஒத்துழைப்பு இல்லாததால் லக்னோ அணி 18 ஓவர்களில் வெறும் 119 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இறுதியில் ராஜஸ்தான் அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. களத்தில் வீரர்களுக்கு இடையே ஏற்படும் ஒரு சிறிய தகவல் தொடர்பு குறைபாடு எப்படி ஒரு அணியின் ஒட்டுமொத்த தோல்விக்குக் காரணமாகிறது என்பதற்கு இந்தப் போட்டி ஒரு சிறந்த உதாரணமாக அமைந்தது. பதோனி பரிதாபமாக ரன் அவுட் ஆகும் அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் கிரிக்கெட் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications