IPL 2026: ஜாம்பவான் ரெக்கார்டை உடைத்த வைபவ் சூர்யவன்ஷி.. ஐபிஎல் வரலாற்றில் மாபெரும் அதிரடி சாதனை
லக்னோ: கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்களான வீரேந்திர ஷேவாக், கிளென் மேக்ஸ்வெல் போன்ற அதிரடி மன்னர்கள் வைத்திருந்த இமாலய சாதனையை, 15 வயதான வைபவ் சூர்யவன்ஷி ஐபிஎல் களத்தில் அசாதாரணமாக முறியடித்து இருக்கிறார். உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்களைக் கதறவிட்டு, ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 500 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற புதிய சரித்திரத்தை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வைபவ் சூர்யவன்ஷி படைத்துள்ளார்.
லக்னோவில் உள்ள ஏகானா மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே 2026 ஐபிஎல் தொடரின் 32வது லீக் போட்டி ஏப்ரல் 22 அன்று நடைபெற்றது. இந்தப் போட்டியின் போது வைபவ் 2 ரன்கள் எடுத்த நிலையில் அவர் ஐபிஎல் அரங்கில் தனது 500வது ரன்னை பதிவு செய்தார். இதற்காக அவர் எடுத்துக்கொண்டது வெறும் 227 பந்துகள் மட்டுமே.

இதன் மூலம் 250 பந்துகளுக்குள் 500 ஐபிஎல் ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற மாபெரும் உலக சாதனையை அவர் தன்வசப்படுத்தினார். இதற்கு முன் ஆஸ்திரேலிய அணியின் அதிரடி வீரர் கிளென் மேக்ஸ்வெல் 260 பந்துகளில் 500 ரன்கள் எடுத்ததே அதிவேக ஐபிஎல் சாதனையாக இருந்தது. பஞ்சாப் கிங்ஸ் அணியின் பிரியான்ஷ் ஆர்யா 280 பந்துகளிலும், வீரேந்திர ஷேவாக் 280 பந்துகளிலும், மும்பை இந்தியன்ஸ் அணியின் நமன் திர் 283 பந்துகளிலும் இந்த மைல்கல்லை எட்டியிருந்தனர். பல ஆண்டுகளாக முறியடிக்கப்படாமல் இருந்த சேவாக், மேக்ஸ்வெல் ஆகியோரின் சாதனைகளை இந்த 15 வயது சிறுவன் தற்போது சுக்குநூறாக்கி உள்ளார்.
வைபவ் சூர்யவன்ஷியின் இந்த அசுர வளர்ச்சி திடீரென நடந்தது அல்ல. தனது 14 வயதிலேயே ஐபிஎல் தொடரில் அறிமுகமான அவர், தனது முதல் சீசனிலேயே 252 ரன்களைக் குவித்து அனைவரையும் மிரள வைத்தார். குறிப்பாக 206.56 என்ற பிரம்மாண்டமான ஸ்ட்ரைக் ரேட்டில் ரன்களை விளாசி, அந்த சீசனின் சிறந்த ஸ்ட்ரைக்கர் விருதையும் தட்டிச் சென்றார்.
நடப்பு 2026 சீசனில் அவரது ஆட்டம் இன்னும் ஒரு படி மேலே சென்றுள்ளது. முன்னணி பந்துவீச்சாளர்கள் வீசும் பந்துகளை ஈவு இரக்கமின்றி பவுண்டரிகளுக்கு விரட்டும் அவர், தற்போது சுமார் 240 என்ற அசுரத்தனமான ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடி வருகிறார். பதினைந்தே வயதில் பல சாதனைகளை நிகழ்த்தி வரும் இவரே எதிர்கால இந்திய அணியின் மிகப்பெரிய நம்பிக்கை நட்சத்திரம் என கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இதற்கிடையே லக்னோ அணிக்கு எதிராக வைபவ் சூர்யவன்ஷி ஏமாற்றம் அளித்தார். சுழற்பந்து வீச்சுக்குச் சாதகமான இந்த ஆடுகளத்தில் ரன் குவிப்பதே கடினம் என விமர்சகர்கள் கூறிய நிலையில், ராஜஸ்தான் அணியின் துவக்க வீரரான வைபவ் சூர்யவன்ஷி சற்று தடுமாறினார். 11 பந்துகளில் 8 ரன்கள் மட்டுமே எடுத்த அவர் மொஹ்சின் கான் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.


Click it and Unblock the Notifications