IPL 2026: சொதப்பிய கேப்டன் ரிஷப் பண்ட்.. போராடி பஞ்சாப் அணிக்கு 197 ரன்கள் இலக்கு நிர்ணயித்த லக்னோ
லக்னோ: 2026 ஐபிஎல் தொடரின் 68-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் குவித்தது. ஜோஷ் இங்லிஸ் மற்றும் ஆயுஷ் பதோனியின் அதிரடியால் லக்னோ அணி சவாலான ஸ்கோரை எட்டியிருந்தாலும், கேப்டன் ரிஷப் பண்ட்டின் மந்தமான ஆட்டம் அந்த அணிக்குச் பின்னடைவை ஏற்படுத்தியது.
லக்னோவில் உள்ள ஏகானா மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். லக்னோ அணிக்குத் தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. அர்ஷின் குல்கர்னி 0 ரன்னிலும், நட்சத்திர வீரர் நிக்கோலஸ் பூரன் 2 ரன்னிலும் ஆட்டமிழந்து ஏமாற்றினர். 20 ரன்களுக்குள் 2 முக்கிய விக்கெட்டுகளை இழந்து லக்னோ அணி தடுமாறியது.

இந்த இக்கட்டான சூழலில் ஜோடி சேர்ந்த ஜோஷ் இங்லிஸ் மற்றும் ஆயுஷ் பதோனி அதிரடியில் இறங்கினர். பதோனி வெறும் 18 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 43 ரன்கள் விளாசி ஆட்டத்தின் போக்கை மாற்றினார். மறுபுறம் பொறுப்புடன் ஆடிய ஜோஷ் இங்லிஸ் 44 பந்துகளில் 72 ரன்கள் (9 பவுண்டரி, 2 சிக்ஸர்) குவித்து ஆட்டமிழந்தார். இவர்களின் அதிரடியால் லக்னோ அணி சரிவிலிருந்து மீண்டது.
ரிஷப் பண்ட் சொதப்பல்
அணியின் மற்ற பேட்ஸ்மேன்கள் 160 முதல் 230 வரையிலான ஸ்டிரைக் ரேட்டில் ரன் குவிக்க, கேப்டன் ரிஷப் பண்ட் மட்டும் இந்தப் போட்டியிலும் ரன் எடுக்கத் திணறினார். 22 பந்துகளைச் சந்தித்த அவர் வெறும் 26 ரன்கள் மட்டுமே எடுத்து யுஸ்வேந்திர சாகல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரது ஸ்டிரைக் ரேட் 118.18 ஆக இருந்தது லக்னோவின் ரன் வேகத்தை வெகுவாகக் குறைத்தது. அதிரடியாக ஆட வேண்டிய மிடில் ஓவர்களில் பண்ட் ஆமை வேகத்தில் ஆடியது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
பஞ்சாப் அணி தரப்பில் அனுபவ வீரர் யுஸ்வேந்திர சாகல் மிகச்சிறப்பாகப் பந்துவீசினார். அவர் 4 ஓவர்களில் 25 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மார்கோ ஜான்சன் 2 விக்கெட்டுகளைப் பெற்றார். ஆனால், நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் 3 ஓவர்களிலேயே 52 ரன்களை வாரி வழங்கியது பஞ்சாப் அணிக்குத் தலைவலியை ஏற்படுத்தியது. அஸ்மதுல்லா உமர்சாய் மற்றும் சஷாங்க் சிங் தலா 1 விக்கெட் எடுத்தனர்.
கடைசி நேரத்தில் அப்துல் சமத் 20 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து ஸ்கோரை உயர்த்தினார். இதன் மூலம் லக்னோ அணி 196 ரன்களை எட்டியது. பிளே-ஆப் வாய்ப்பைத் தக்கவைக்க 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் பஞ்சாப் அணி அடுத்து விளையாடியது.


Click it and Unblock the Notifications
