சென்னை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கடந்த நான்கு சீசன்களாக இடம் பிடித்த இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளர் பதிரனா, தற்போது கொல்கத்தா அணியால் 18 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டிருக்கிறார்.
இதன் மூலம் பதிரனாவின் சிஎஸ்கே பயணம் முடிவுக்கு வந்திருக்கிறது. குட்டி மலிங்கா என்று அழைக்கப்பட்ட பதிரனா, சிஎஸ்கே அணிக்காக 32 போட்டிகளில் விளையாடி 47 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். 22 வயதான பதிரனா, சிஎஸ்கே அணியில் தான் பல விஷயங்களை கற்றுக் கொண்டார்.

எனினும் பதிரனாவின் பந்துவீச்சு ஸ்டைலை இலங்கை கிரிக்கெட் அணி நிர்வாகம் மாற்றியதால் கடுப்பான சிஎஸ்கே அவரை அணியிலிருந்து விடுவித்தது. இது குறித்து இன்ஸ்டாகிராமில் பதிரனா, உருக்கமான ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், பல கனவுகள் நிறைந்த ஒரு சிறுவனாக இந்த மஞ்சள் நிற ஆடையை கர்வத்துடன் அணிந்திருந்தேன்.
சிஎஸ்கே கிரிக்கெட்டை தாண்டி எனக்கு நம்பிக்கை, குடும்பம் என நான் மகிழ்ச்சியாக நினைக்கும் அனைத்தையும் தந்திருக்கின்றது. 2022 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து 2025 ஆம் ஆண்டு இறுதி வரை ஒவ்வொரு நிமிடமும் நான் மகிழ்ச்சியாக எண்ணுகிறேன். இந்த காலத்தில் சிஎஸ்கே, என்னை ஒரு மனிதனாகவும், ஒரு நல்ல கிரிக்கெட் வீரராகவும் மாற்றியது.
கடந்த சீசனில் காயம் அடைந்தாலும் சிஎஸ்கே அணிக்காக கடைசிவரை விளையாடி கோப்பையை வென்று கொடுத்து இந்த அணிக்காக 50 விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும் என்று நான் கடுமையாக முயற்சி செய்தேன். ஆனால் என்னால் அது முடியவில்லை . ஆனால் நான் கனவு கண்டதும், அதற்கான உழைப்பை போட்டதும் என் இதயத்தில் இருந்து வந்தது.
என் வாழ்க்கையில் வழிக்காட்டியாக இருந்த தோனி அண்ணனுக்கு நான் என்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன். சிஎஸ்கே அணி நிர்வாகமும், காசி சாரும் என் மீது வைத்திருந்த நம்பிக்கைக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன். என் அணியின் சக வீரர்கள் ஒரு குடும்பமாக, சகோதரராக எனக்கு தோள் கொடுத்தார்கள். என்னுடைய கிரிக்கெட்டின் உச்சத்திலும் சரிவிலும் சிஎஸ்கே ரசிகர்கள் எப்போதும் எனக்காக துணை நின்றார்கள்.
நீங்கள் தான் எனக்கு எல்லாமுமே, "சென்னை எப்போதுமே என் இதயத்தில் ஒரு சிறப்பு இடத்தை பிடிக்கும்" என்று தமிழில் அதை குறிப்பிட்டு இருந்தார். தற்போது என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தை கே கே ஆர் உடன் தொடங்குகிறேன். நன்றி சிஎஸ்கே! நன்றி சென்னை! என்று பதிவிட்டுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2023 ஆம் ஆண்டு கோப்பையில் வெல்ல பதிரனா முக்கிய காரணமாக இருந்தார். அந்த தொடரில் அவர் 19 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.