IPL 2026: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஹாட்ரிக் தோல்வி.. வெற்றி பாதைக்கு திரும்பிய ஆர்சிபி
ஐபிஎல் 2026 தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற பரபரப்பான லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு எதிர்கொண்டது. இந்தப் போட்டி கடைசி வரை உச்சகட்ட எதிர்பார்ப்புடன் சென்றது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்ணயித்த பிரம்மாண்டமான இலக்கை சேஸ் செய்ய முடியாமல் மும்பை இந்தியன்ஸ் தோல்வியை தழுவியது
போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சைத் தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, ஃபில் சால்ட் மற்றும் விராட் கோலியின் அதிரடியான துவக்கத்தால் மிரட்டியது. பவர்ப்ளேயின் முடிவில் விக்கெட் இழப்பின்றி 70 ரன்கள் குவித்த ஆர்சிபி அணி, அபாரமான ஆதிக்கத்தைச் செலுத்தியது.

ஆர்சிபி அணியின் துவக்க வீரர் ஃபில் சால்ட், மிட்செல் சான்ட்னர் மற்றும் மயங்க் மார்கண்டே போன்ற பந்துவீச்சாளர்களைத் துவம்சம் செய்து மின்னல் வேகத்தில் அரைசதம் அடித்தார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய சால்ட், மைதானத்தின் அனைத்துப் பக்கங்களிலும் பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் விளாசி மும்பை அணியின் பந்துவீச்சாளர்களுக்கு கடும் நெருக்கடியைக் கொடுத்தார்.
விராட் கோலி ஒரு பவுண்டரி அடித்து ஆர்சிபி அணியின் ஸ்கோரை 100 ரன்களை கடக்க உதவினார். பிறகு 38 பந்துகளில் தனது அரைசதத்தை எட்டினார். இதற்கிடையில், ஆர்சிபி அணியின் ஸ்கோர் 120 ஆக இருந்தபோது, ஷர்துல் தாக்கூர் வீசிய பந்தில் ஹர்திக் பாண்டியாவிடம் கேட்ச் கொடுத்து ஃபில் சால்ட் 47 பந்துகளில் 79 ரன்களில்ஆட்டமிழந்தார்.
சால்ட் வெளியேறிய பிறகு களமிறங்கிய கேப்டன் ரஜத் பட்டிதார், முதல் பந்திலிருந்தே அதிரடி காட்டினார். சிங்கிள் எடுக்காமல் பவுண்டரிகளை மட்டுமே அடித்து மும்பை பந்துவீச்சாளர்களைத் திணறடித்தார். வேகப்பந்து வீச்சாளர் ட்ரென்ட் போல்ட்டையும் விட்டுவைக்காமல், ஒரே ஓவரில் 16 ரன்கள் உட்பட சிக்ஸர்களைப் பறக்கவிட்டு, தனது அரைசதத்தைத் தொட்டார்.
களத்தில் இருந்த விராட் கோலி மற்றும் பட்டிதார் கூட்டணி தொடர்ந்து அதிரடி காட்டியது. பின்னர், 14.4 ஓவரில் ஹர்திக் பாண்டியா வீசிய பந்தில் சூர்யகுமார் யாதவிடம் கேட்ச் கொடுத்து கோலி 51 ரன்களில் வெளியேறினார். அடுத்து மிட்செல் சான்ட்னர் பந்துவீச்சில் திலக் வர்மாவிடம் கேட்ச் கொடுத்து பட்டிதார் 20 பந்துகளில் 58 ரன்களில் ஆட்டமிழந்த பிறகும், டிம் டேவிட் மற்றும் ஜிதேஷ் ஷர்மா சிறப்பாக முடித்தனர்.
முடிவில், டிம் டேவிட் 16 பந்துகளில் 34 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருக்க, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 240 ரன்கள் எடுத்தது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 241 ரன்கள் என்ற கடின இலக்கை நிர்ணயித்தது பெங்களூரு அணி. இந்த மெகா ஸ்கோரை நோக்கி மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்கியது.
மும்பை இந்தியன்ஸ் அணியின் துவக்க ஆட்டக்காரர்களான ரோஹித் ஷர்மா மற்றும் ரியான் ரிக்கல்டன் ஆகியோர் நல்ல துவக்கம் கொடுத்தனர். முதல் 5 ஓவர்களில் இருவரும் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். எனினும், 5.2 ஓவரில் தனது வலது தொடைப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக, ரோஹித் ஷர்மா 34 ரன்களுடன் மைதானத்தை விட்டு வெளியேறினார். இது மும்பை அணிக்கு பின்னடைவாக அமைந்தது.
அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ், ரிக்கல்டனுடன் இணைந்து ஸ்கோரை நகர்த்த முயற்சித்தார். ஆனால், பவர்ப்ளேயின் முடிவில் மும்பை அணி விக்கெட் இழப்பின்றி 62 ரன்கள் எடுத்திருந்தது. 7.1 ஓவரில் சுயாஷ் ஷர்மா வீசிய பந்தில் ஸ்லாக்-சுவீப் அடிக்க முயன்ற ரியான் ரிக்கல்டன் 38 ரன்களில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதே ஓவரில் திலக் வர்மா 2 ரன்களில் கேட்ச் கொடுத்து வெளியேறியதும் மும்பை அணிக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது.
சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் இணைந்து அணியை சரிவிலிருந்து மீட்க முயன்றனர். இருவரும் சுயாஷ் ஷர்மா மற்றும் புவனேஷ்வர் குமார் போன்ற பந்துவீச்சாளர்களைத் துணிச்சலுடன் எதிர்கொண்டனர். ஆனாலும், 12.2 ஓவரில் க்ருனால் பாண்டியா வீசிய பந்தில் துரதிர்ஷ்டவசமாக சூர்யகுமார் யாதவ் 23 ரன்களில் கேட்ச் கொடுத்து வெளியேற, மும்பை அணி மேலும் தடுமாறியது.
நிலைமை மேலும் மோசமடைந்தது. 15வது ஓவரில் ஜேக்கப் டஃபி வீசிய பந்தை பெரிய ஷாட் அடிக்க முயன்ற ஹர்திக் பாண்டியா 18 ரன்களில் ரோம் பியரி ஷெப்பர்டிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். இதனால் மும்பை அணியின் ரன் சேஸிங்கில் பெரும் பின்னடைவு ஏற்பட்டது. மும்பை அணிக்கு 27 பந்துகளில் 87 ரன்கள் தேவை என்ற நிலையில் சவாலாக இருந்தது.
16வது ஓவரில் ராசிக் சலாம் டார், நமன் திர் (1 ரன்) விக்கெட்டை வீழ்த்தி மும்பை அணிக்கு மேலும் நெருக்கடி கொடுத்தார். தொடர்ந்து போராடிய ஷெர்ஃபேன் ரூதர்போர்ட் தனியாளாகப் போராடினார். ஆனால், வெற்றிக்கு ஓவருக்கு 32 ரன்கள் தேவை என்ற மிக உயர்ந்த ரன்ரேட், மும்பை அணிக்கு சாத்தியமில்லாத ஒன்றாக மாறியது. இருப்பினும் கடைசி ஓவரில் ரூதர்போர்ட் 4 சிக்சத் விளாசினார். எனினும் மும்பை அணியால் இருபது ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 222 ரன்கள் எடுத்தது. இதில் ரூதர்போர்ட் 31 பந்துகளில் 71 ரன்கள் விளாசி கடைசி வரை போரடினார். இதில் 9 சிக்சர்கள் அடங்கும்.


Click it and Unblock the Notifications