IPL Auction: சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ்-இடம் எவ்ளோ பணம் இருக்கு? 10 ஐபிஎல் அணிகளின் ஏலத் தொகை விவரம்
அபுதாபி: 2026 ஐபிஎல் மினி ஏலம் டிசம்பர் 16 அன்று அபுதாபியில் நடைபெறவுள்ளது. தங்களது அணியின் குறைகளைச் சரிசெய்யவும், சாம்பியன் பட்டத்தை வெல்லவும் அனைத்து அணிகளும் ஏலத்தில் பல்வேறு வீரர்களை போட்டி போட்டு வாங்க உள்ளன. இந்த ஏலத்தில் எந்த அணியிடம் எவ்வளவு பணம் (Purse Value) மீதமுள்ளது? யார் ஆதிக்கம் செலுத்தப் போகிறார்கள்? யார் சிக்கனத்தைக் கடைப்பிடிக்கப் போகிறார்கள்? என்ற விவரத்தை பார்க்கலாம்.
இந்த ஏலத்தில் அதிகப்படியான பணத்துடன் களமிறங்கும் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) தான். அந்த அணியிடம் சுமார் ₹64.3 கோடி கையிருப்பு உள்ளது. அதிக பணம் இருந்தாலும், அவர்கள் அதிக வீரர்களை வாங்க வேண்டிய கட்டாயத்திலும் உள்ளனர். மொத்தம் 13 இடங்களை அவர்கள் நிரப்ப வேண்டும். அதில் 6 வெளிநாட்டு வீரர்கள் தேவை உள்ளது.

சிஎஸ்கே-வும் சளைத்தவர்கள் அல்ல
கேகேஆருக்கு அடுத்தபடியாக, எம்.எஸ்.தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி அதிக பணத்துடன் உள்ளது. இவர்களிடம் ₹43.4 கோடி கையிருப்பு உள்ளது. மொத்தம் 10 வீரர்களை சிஎஸ்கே தேர்வு செய்ய வேண்டும். அதில் 4 வெளிநாட்டு வீரர்கள். இந்த இரண்டு அணிகளைத் தவிர வேறு எந்த அணியிடமும் ₹30 கோடிக்கு மேல் கையிருப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நடுத்தர பட்ஜெட் அணிகள் (SRH, LSG, DC)
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH): ஆடம் ஜம்பா, ராகுல் சஹார் போன்றவர்களை விடுவித்த பிறகு, இவர்களிடம் ₹25.5 கோடி உள்ளது. 10 இடங்களை நிரப்ப வேண்டும்.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG): ரிஷப் பண்ட் தலைமையில் களமிறங்கும் லக்னோ அணியிடம் ₹22.9 கோடி உள்ளது. டேவிட் மில்லர், ரவி பிஷ்னாய் போன்றவர்களை விடுவித்தாலும், முகமது ஷமியை டிரேட் மூலம் வாங்கியுள்ளனர். 6 இடங்களை நிரப்ப வேண்டும்.
டெல்லி கேப்பிட்டல்ஸ் (DC): கே.எல்.ராகுல், அக்சர் படேல், குல்தீப் யாதவ் ஆகியோரைத் தக்கவைத்துள்ள டெல்லியிடம் ₹21.80 கோடி உள்ளது. 8 இடங்களை (5 வெளிநாட்டு வீரர்கள்) இவர்கள் நிரப்ப வேண்டும்.
குறைவான பட்ஜெட் அணிகள் (RCB, RR, GT, PBKS)
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB): நடப்பு சாம்பியனான ஆர்சிபி தனது முக்கிய வீரர்களைத் தக்கவைத்துள்ளது. இவர்களிடம் ₹16.4 கோடி உள்ளது. 8 இடங்களை நிரப்ப வேண்டும்.
ராஜஸ்தான் ராயல்ஸ் (RR): இவர்களிடம் ₹16.05 கோடி உள்ளது. 9 இடங்களை நிரப்ப வேண்டும் என்றாலும், ஒரே ஒரு வெளிநாட்டு வீரர் இடம் மட்டுமே காலியாக உள்ளது.
குஜராத் டைட்டன்ஸ் (GT): சுப்மன் கில், ரஷித் கான், ஜோஸ் பட்லர், ரபாடா, சிராஜ் என வலுவான கோர் டீமை வைத்துள்ளனர். இவர்களிடம் ₹12.90 கோடி உள்ளது. 5 இடங்களை நிரப்ப வேண்டும்.
பஞ்சாப் கிங்ஸ் (PBKS): இவர்களிடம் ₹11.50 கோடி மட்டுமே உள்ளது. 4 இடங்களை மட்டுமே நிரப்ப வேண்டியுள்ளது.
பரிதாப நிலையில் மும்பை இந்தியன்ஸ்
ஐபிஎல் வரலாற்றில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் (MI) அணிதான் இந்த ஏலத்தில் மிகவும் ஏழ்மையான அணி. இவர்களிடம் வெறும் ₹2.75 கோடி மட்டுமே கையிருப்பு உள்ளது. இதை வைத்துக்கொண்டு அவர்கள் 5 வீரர்களை வாங்க வேண்டும். பெரிய வீரர்களை ஏலத்தில் எடுப்பது மும்பைக்குக் கனவாகவே இருக்கும்.


Click it and Unblock the Notifications