IPL 2026: 19 ஓவரில் 213 ரன்கள் எடுக்கணும்.. ஆர்சிபி அணிக்கு சவால் விட்ட லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்
லக்னோ: ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஷ் அபார சதம் விளாச, ஆர்சிபி அணிக்கு கடினமான இலக்கை நிர்ணயித்துள்ளது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ். இரண்டு முறை மழை குறுக்கிட்டதால் 19 ஓவர்களாகக் குறைக்கப்பட்ட இந்த ஆட்டத்தில், கடைசி நேரத்தில் கேப்டன் ரிஷப் பண்ட் காட்டிய ருத்ரதாண்டவம் பெங்களூரு பந்துவீச்சாளர்களை நிலைகுலையச் செய்தது. 213 ரன்கள் என்ற பிரம்மாண்ட இலக்கை ஆர்சிபி அணி எட்டுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே தற்போதே எகிறியுள்ளது.
இந்தப் போட்டியில் லக்னோ அணியின் தொடக்க வீரராகக் களம் இறங்கிய மிட்செல் மார்ஷ், ஆரம்பம் முதலே பெங்களூரு அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தார். மைதானத்தின் நான்கு பக்கங்களிலும் பந்துகளைப் பறக்கவிட்ட அவர், 56 பந்துகளில் 111 ரன்கள் குவித்து அசத்தினார். இதில் 9 சிக்சர்களும், 9 பவுண்டரிகளும் அடங்கும். இந்த ஐபிஎல் தொடரில் மார்ஷ் பதிவு செய்யும் முதல் சதம் இதுவாகும். அவரது அதிரடியால் லக்னோ அணி இமாலய ஸ்கோரை நோக்கி நகர்ந்தது.

மழை குறுக்கீடு: ஆட்டத்தின் இடையே இரண்டு முறை மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பெரும் பரபரப்புடன் காணப்பட்டது. இதனால் தலா 20 ஓவர்கள் கொண்ட ஆட்டம், தலா 19 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. லக்னோ அணியின் மற்றொரு தொடக்க வீரர் அர்ஷின் குல்கர்னி 24 பந்துகளில் 17 ரன்கள் எடுத்து ஏமாற்றினாலும், அடுத்து வந்த நிக்கோலஸ் பூரன் அதிரடியாக 23 பந்துகளில் 38 ரன்கள் சேர்த்து ரன் வேகத்தை குறையாமல் பார்த்துக்கொண்டார்.
ரிஷப் பண்ட் அதிரடி: மார்ஷ் ஆட்டமிழந்த பிறகு கடைசி நேரத்தில் களம் புகுந்த கேப்டன் ரிஷப் பண்ட், மின்னல் வேகத்தில் ரன்களைச் சேர்த்தார். வெறும் 10 பந்துகளை மட்டுமே சந்தித்த அவர், 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்களுடன் 32 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். பண்ட்டின் இந்த அதிரடி ஆட்டம் லக்னோ அணியை 19 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் என்ற வலுவான நிலைக்குக் கொண்டு சென்றது.
ஆர்சிபி தரப்பில் க்ருணால் பாண்டியா, ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் ரசிக் சலாம் தார் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். இருப்பினும், ரன்களை வாரி வழங்கியதால் ஆர்சிபி அணிக்கு பின்னடைவு ஏற்பட்டது. மழை குறுக்கீடு காரணமாக டக்வொர்த் லூயிஸ் முறைப்படி ஆர்சிபி அணியின் இலக்கு 19 ஓவர்களில் 213 ரன்களாக மாற்றியமைக்கப்பட்டது.


Click it and Unblock the Notifications