IPL 2026: ஷமி, பண்ட் இணைந்து செய்த சம்பவம்... அரண்டு போன ராஜஸ்தான் ராயல்ஸ்.. டாப் ஆர்டர் காலி
லக்னோ: 2026 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் டாப் ஆர்டரை லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி ஜோடி அடுத்ததடுத்த பந்துகளில் வீழ்த்தி மிரள வைத்தனர். பந்தை சிக்சருக்கு பறக்கவிட முயன்ற பேட்ஸ்மேனை, அந்தரத்தில் பறந்து பண்ட் பிடித்த அந்த அசாத்தியமான கேட்ச் ஒட்டுமொத்த மைதானத்தையும் அதிர வைத்தது. அடுத்தடுத்த பந்துகளில் நிகழ்ந்த இந்த அதிரடி சம்பவம் ராஜஸ்தான் அணியை மட்டுமின்றி ரசிகர்களையும் உறைய வைத்தது.
லக்னோவில் உள்ள ஏகானா மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. பேட்டிங்கைத் தொடங்கிய ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் ஆரம்பம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த முயன்றனர். ஆனால், ஆட்டத்தின் 3வது ஓவரை வீச வந்த மூத்த வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, ஆட்டத்தின் போக்கையே முற்றிலுமாக மாற்றியமைத்தார்.

ஷமி வீசிய பவுன்சர் பந்தை ராஜஸ்தானின் அதிரடி தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஓங்கி அடிக்க முயன்றார். ஆனால் பந்து பேட்டின் விளிம்பில் பட்டு பின்புறம் எகிறியது. அப்போது விக்கெட் கீப்பராக நின்றிருந்த ரிஷப் பண்ட் கண் இமைக்கும் நேரத்தில் அந்தரத்தில் மிக உயரமாகப் பறந்து நம்ப முடியாத அளவில் ஒரு அட்டகாசமான கேட்சை பிடித்து அசத்தினார். ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்த அதிர்ச்சியிலிருந்து ராஜஸ்தான் கூடாரம் மீள்வதற்குள், அடுத்த பந்திலேயே மற்றொரு மாபெரும் விக்கெட்டை வீழ்த்தி ஷமி மிரட்டினார்.
புதிதாகக் களமிறங்கிய துருவ் ஜூரெல் சந்தித்த முதல் பந்தே உள்ளே வந்து லேசாக வெளியே சென்றது. அதை அவர் எதிர்கொள்ள முயன்றபோது, பந்து பேட்டில் லேசாக உரசி மீண்டும் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் கைகளுக்கே நேரடியாக தஞ்சமடைந்தது. அடுத்தடுத்த 2 பந்துகளில் ராஜஸ்தான் அணியின் 2 முக்கிய விக்கெட்டுகளை ஷமி மற்றும் பண்ட் கூட்டணி சுலபமாகக் காலி செய்தது. இதனால் புயல் வேகத்தில் ரன் குவித்து வந்த ராஜஸ்தான் அணி வெறும் 3 ஓவர்களில் 32 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து பெரும் தடுமாற்றத்திற்கு உள்ளானது.
அதைத் தொடர்ந்து வைபவ் சூர்யவன்ஷி, ரியான் பராக், ஷிம்ரான் ஹெட்மயர் என வரிசையாக விக்கெட்களை இழந்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. நடப்பு ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்காக விளையாடி வரும் முகமது ஷமி மிகச் சிறப்பான ஃபார்மில் உள்ளார். இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் அவர் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இந்தப் போட்டியில் ஷமி தான் வீசிய முதல் 3 ஓவர்களில் 24 ரன்களை கொடுத்து 2 விக்கெட்களை வீழ்த்தினார்.


Click it and Unblock the Notifications