Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2026: பும்ரா, ஹேசில்வுட்டாலயே முடியல... வைபவ் சூர்யவன்ஷிக்கு எதிராக மோஷின் கான் மாஸ்டர் பிளான்

லக்னோ: ஜஸ்பிரித் பும்ரா, ஜோஷ் ஹேசில்வுட், புவனேஷ்வர் குமார் என உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்களை எல்லாம் தனது அதிரடியால் நிலைகுலையச் செய்தவர் 15 வயது இளம் புயல் வைபவ் சூர்யவன்ஷி. அனுபவம், சீனியாரிட்டி என எதைப் பற்றியும் கவலைப்படாமல் இவர்களை எல்லாம் மைதானத்தின் நாலாபுறமும் சிதறடித்த அந்தச் சிறுவனை, இந்திய அணிக்கு இப்போதே தேர்வு செய்யலாம் எனப் பலரும் பரிந்துரைத்து வருகின்றனர்.

ஆனால், இத்தனை ஜாம்பவான்களால் முடியாத ஒன்றை லக்னோ அணியின் மோஷின் கான் மிக லாவகமாகச் செய்து முடித்துள்ளார். இந்த சீசனில் இதுவரை எவருமே செய்யாத வகையில் வைபவ்வை ரன் எடுக்க விடாமல் கட்டிப்போட்டு, இறுதியில் விக்கெட்டையும் வீழ்த்திய மோஷின் கானின் அந்த 'மேஜிக் ஓவர்' தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

IPL 2026 Mohsin Khan Silences Vaibhav Suryavanshi with Masterclass Over in LSG vs RR match

லக்னோ எகானா மைதானத்தில் நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், வைபவ் சூர்யவன்ஷியை வீழ்த்த லக்னோ அணியின் மோஷின் கான் ஒரு கச்சிதமான வியூகத்தை வகுத்திருந்தார். அவரது உடலை நோக்கித் துல்லியமாகப் பந்துவீசி, கைகளைத் தூக்கி அடிக்க இடம் கொடுக்காமல் நெருக்கடி கொடுத்தார். சில பந்துகள் நேராக வந்தன, சில பந்துகள் ஆடுகளத்தில் பட்டுத் திசை மாறின. இதனால் ரன் எடுக்க முடியாமல் வைபவ் திணறினார். அந்த ஓவரின் முதல் 5 பந்துகளில் ஒரு ரன் கூட விட்டுக்கொடுக்காமல் மோஷின் கான் மிரட்டினார்.

தொடர்ச்சியாக 5 பந்துகள் 'டாட்' ஆனதால் ஏற்பட்ட அழுத்தத்தைத் தாள முடியாமல், 6-வது பந்தில் எப்படியாவது ரன் எடுத்துவிட வேண்டும் என்ற வேகத்தில் வைபவ் ஒரு பெரிய ஷாட் ஆட முயன்றார். லெக் சைடு வந்த பந்தை குறுக்காக அடிக்க முயன்றபோது, பந்து பேட்டின் விளிம்பில் பட்டு உயரே எழும்பியது. அதை திக்வேஷ் ரதி ஓடிச் சென்று கச்சிதமாகப் பிடித்தார். இதன் மூலம் இந்த சீசனில் முதல் முறையாக வைபவ் சூர்யவன்ஷிக்கு எதிராக ஒரு 'விக்கெட்-மெய்டன்' ஓவரை வீசி மோஷின் கான் சாதனை படைத்தார். 11 பந்துகளைச் சந்தித்த வைபவ் 8 ரன்களில் வெளியேறினார். அவரது ஸ்ட்ரைக் ரேட் இந்த சீசனில் முதல் முறையாக 100-க்கும் கீழ் சரிந்தது.

இருப்பினும், ஆட்டமிழப்பதற்கு முன்னதாக வைபவ் ஒரு மாபெரும் உலக சாதனையைத் தன்வசப்படுத்தினார். பிரின்ஸ் யாதவ் வீசிய ஓவரில் 2 பவுண்டரிகளை விரட்டியதன் மூலம், ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 500 ரன்களைக் கடந்த வீரர் என்ற சாதனையைப் படைத்தார். வெறும் 227 பந்துகளில் அவர் இந்த மைல்கல்லை எட்டினார். இதற்கு முன்னதாக கிளென் மேக்ஸ்வெல் 260 பந்துகளில் எடுத்ததே சாதனையாக இருந்தது.

போட்டியின் முடிவில், முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி ரவீந்திர ஜடேஜாவின் போராட்டத்தால் 159 ரன்கள் எடுத்தது. முகமது ஷமி ஆரம்பத்திலேயே 2 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி லக்னோவுக்கு நம்பிக்கை அளித்தார். ஆனால், 160 ரன்கள் என்ற எளிய இலக்கைத் துரத்திய லக்னோ அணி, ராஜஸ்தான் பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் 119 ரன்களுக்குச் சுருண்டது. இதனால் ராஜஸ்தான் அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஜாம்பவான்களால் முடியாததை லக்னோ அணியின் மோஷின் கான் செய்து காட்டினாலும், இறுதியில் ராஜஸ்தான் அணியே வெற்றி வாகை சூடியது.

Story first published: Thursday, April 23, 2026, 0:17 [IST]
Other articles published on Apr 23, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+