IPL 2026: சிஎஸ்கே ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. குணமடைந்தார் பிரவீஸ்.. தோனியும் ரெடி!
சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு ஒரு சில நாட்களில் உடற்தகுதி பரிசோதனை நடத்தப்படும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நடப்பு ஐபிஎல் தொடருக்கு முன்னதாக ஏற்பட்ட கணுக்கால் தசைப்பிடிப்பு காரணமாக, அவர் இதுவரை ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. தோனி இல்லாத நிலையில், சிஎஸ்கே அணி தனது முதல் மூன்று போட்டிகளிலும் தோல்வியைத் தழுவி உள்ளது.
தோனிக்கு நடத்தப்படும் பரிசோதனையின் முடிவைப் பொறுத்து, தோனி இந்த சனிக்கிழமை சேப்பாக்கத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக நடக்கவிருக்கும் அடுத்த ஆட்டத்தில் அணிக்குத் திரும்ப வாய்ப்புள்ளது. வலைப்பயிற்சியில் பேட்டிங் செய்து எந்த அசௌகரியமும் இன்றி செயல்பட்டாலும், 44 வயதான இந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனை அவசரப்படுத்த சிஎஸ்கே நிர்வாகம் விரும்பவில்லை.

தோனி இல்லாத நிலையில், ஐபிஎல் 2026 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோசமான தொடக்கத்தைச் சந்தித்துள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகளிடம் தோல்வியடைந்து, புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் திணறி வருகிறது. இந்த சீசனில் இதுவரை ஒரு வெற்றியும் பெறாத மூன்று அணிகளில் சிஎஸ்கேவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை வென்ற கேப்டனான தோனி, தனது கிரிக்கெட் வாழ்க்கையின் இறுதி கட்டத்தில் இருப்பதால், நடப்பு சீசனின் முடிவில் ஓய்வு பெறுவார் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. தோனி மட்டுமின்றி, தென் ஆப்பிரிக்க வீரரான டேவால்ட் பிரேவிஸும் சீசனின் முதல் மூன்று போட்டிகளில் காயம் காரணமாக களமிறங்கவில்லை. பயிற்சி அமர்வுகளில் அவருக்கு பக்கவாட்டு தசைப்பிடிப்பு ஏற்பட்டது.
அதிரடி மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் டேவால்ட் பிரேவிஸ், டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான அடுத்த ஆட்டத்தில் திரும்புவார் என சிஎஸ்கே தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளெமிங் நம்பிக்கை தெரிவித்தார். இது குறித்து பேசிய ஃபிளெமிங், "அடுத்த ஆட்டத்திற்கு அவர் தயாராகிவிடுவார் என்று நம்புகிறோம். எங்களுக்கு ஐந்து நாட்கள் இடைவெளி உள்ளது. நாங்கள் எச்சரிக்கையாகச் செயல்பட்டு வருகிறோம், திட்டமிட்டபடி இந்த ஐந்து நாட்களும் சென்றால், அவர் தயாராகிவிடுவார்," என்றார். தோனி, பிரவீஸ் அணிக்கு திரும்பினால், சிஎஸ்கேவின் பலம் பலமடங்கு அதிகரிக்கும்.


Click it and Unblock the Notifications