IPL 2026: சிஎஸ்கே அணியில் தோனி விளையாடவில்லை.. முதல்வர் விஜய் வருகை ரத்து.. என்ன நடந்தது?
சென்னை: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் 2026 லீக் போட்டியில், தோனி விளையாடவில்லை. ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த நிலையில் இது பெரும் ஏமாற்றமாக மாறியது. இது தோனியின் கடைசி போட்டி என்றால் அதைப் பார்க்க தமிழ்நாடு முதல்வர் விஜய் சேப்பாக்கம் வரக்கூடும் என கூறப்பட்டது. ஆனால், இப்போது விஜய் வர மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது.
டாஸ் நிகழ்வின் போது சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் இந்தத் தகவலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இது மைதானத்தில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தைத் தந்துள்ளது.

தோனி இன்னும் 100 சதவீத உடல் தகுதியை எட்டவில்லை என்பதால் இன்றைய போட்டியில் அவர் சேர்க்கப்படவில்லை என ருதுராஜ் தெரிவித்தார். இருப்பினும், காயம் காரணமாக இந்த சீசனில் இதுவரை ஒரு போட்டியில் கூட விளையாடாத தோனி, சேப்பாக்கத்தில் நடைபெறும் கடைசி 'ஹோம் மேட்ச்' ஆட்டத்தில் களம் காண்பார் என ரசிகர்கள் காலை முதலே மைதானத்தில் குவிந்திருந்தனர்.
தோனி விளையாடாத காரணத்தால், தமிழக முதல்வர் விஜய் இந்தப் போட்டியை நேரில் காண வருவதற்கான வாய்ப்புகள் இல்லை என தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே, தோனி களம் இறங்குவது உறுதியானால் மட்டுமே முதல்வர் விஜய் மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள் மைதானத்திற்கு வருவார்கள் எனத் தகவல் வெளியானது. இதற்காக மைதானத்தில் உள்ள மிக முக்கிய பிரமுகர்களுக்கான விஐபி அறைகள் முன்பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது தோனி அணியில் இல்லாததால் முதல்வரின் வருகை ரத்தாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.
பிளே-ஆப் சுற்றுக்குத் தகுதி பெற சிஎஸ்கே அணிக்கு இந்தப் போட்டியின் வெற்றி அவசியமாகும். 12 புள்ளிகளுடன் உள்ள சிஎஸ்கே அணி, இன்று ஹைதராபாத் அணியை வீழ்த்தினால் மட்டுமே அடுத்த சுற்றுக்கான வாய்ப்பு பிரகாசமாகும். கடந்த 4 போட்டிகளில் 3 வெற்றிகளைப் பெற்றுள்ள சிஎஸ்கே அணி, அதே முனைப்புடன் களம் கண்டுள்ளது.


Click it and Unblock the Notifications
