IPL 2026: மும்பைக்கு எதிரான போட்டியில் களமிறங்கும் தோனி.. சிஎஸ்கே பயிற்சியில் நடந்த மாற்றம்
மும்பை: ஐபிஎல் 2026 தொடரின் பாதிப்பகுதி முடிந்துள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் நட்சத்திர வீரர் தோனியின் வருகைக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஏப்ரல் 23 அன்று வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான "எல் கிளாசிகோ" போட்டியில் அவர் களமிறங்குவார் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
முழங்கால் காயம் காரணமாக தோனி இந்த சீசனில் இதுவரை விளையாடவில்லை. ஐபிஎல் துவங்கும் முன் ஏற்பட்ட காயம், தொடக்க ஆட்டங்களில் பங்கேற்கத் தடையாக இருந்தது. பயிற்சி செய்த போதும், சிஎஸ்கே நிர்வாகம் அவரது உடல்நலனில் மிகுந்த கவனம் செலுத்துகிறது. முழு உடல் தகுதியடைந்த பின்னரே அவரை களமிறக்க திட்டமிட்டுள்ளனர்.

இளம் வீரர் ஆயுஷ் மாத்ரே, இடது தொடை தசைநார் காயம் காரணமாக ஐபிஎல் 2026 தொடரில் இருந்து முழுமையாக விலகியுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸுக்குப் பெரும் பின்னடைவாகும். மாத்ரேவின் இந்த விலகல் அணிக்குக் கூடுதல் சவால்களை உருவாக்கியுள்ளது.
ஏப்ரல் 18 அன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திற்கு எதிரான போட்டியின் போது, ரன் எடுக்க முயன்ற மாத்ரேவுக்கு இக்காயம் ஏற்பட்டது. வலியுடன் ஆட்டமிழந்த அவருக்கு 6 முதல் 12 வாரங்கள் வரை ஓய்வும் சிகிச்சையும் அவசியம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
தோனியின் வருகையை உறுதிப்படுத்தும் விதமாக, சென்னை சூப்பர் கிங்ஸ் வெளியிட்ட பயிற்சி வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. வான்கடே மைதானத்தில் எடுத்த அந்த வீடியோவில், விக்கெட் கீப்பிங் செய்த தோனி, கார்த்திக் ஷர்மாவை விளையாட்டாக வெளியேற சைகை காட்டினார்.
தற்போது விக்கெட் கீப்பிங் பணிகளை கார்த்திக் ஷர்மா மற்றும் சஞ்சு சாம்சன் மேற்கொள்கின்றனர். தோனி இம்பாக்ட் பிளேயராகவே அணிக்குள் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சிஎஸ்கே பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸி, மாத்ரேவின் காயம் ஒரு "பெரும் இழப்பு" எனக் குறிப்பிட்டார்.
குறிப்பாக, இத்தொடரில் மாத்ரே அபாரமான ஃபார்மில் இருந்தார். ஆறு போட்டிகளில் 201 ரன்கள் குவித்து, 177.87 ஸ்ட்ரைக் ரேட்டுடன் அசத்தினார். ஆறு போட்டிகளில் நான்கு தோல்விகளால் சென்னை அணி தடுமாறும் சூழலில், அவரது இந்த விலகல் மேலும் சவால்களை அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications