IPL 2026: தீபக் சாஹர், சர்துல் தாக்கூரை காசு கொடுத்து வீட்டுக்கு அனுப்புங்க! MI அணிக்கு வேண்டாம்- ஸ்ரீகாந்த்
மும்பை: ஐபிஎல் 2026 தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் நான்காவது தொடர் தோல்வியை சந்தித்தது. இப்போட்டியில் 195 ரன்களைக்கூட தற்காத்துக்கொள்ள முடியாமல் தோற்றது. மும்பை அணியில், தீபக் சாஹர் 2.3 ஓவர்களில் 45 ரன்களுக்கு விக்கெட் எடுக்காமலும், ஷர்துல் தாக்கூர் 3 ஓவர்களில் 42 ரன்களுக்கு ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்தினார். இதைத் தொடர்ந்து முன்னாள் இந்திய கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் இருவரையும் கடுமையாக விமர்சித்தார்.
போட்டிக்குப் பிந்தைய தனது யூடியூப் சேனலில் பேசிய ஸ்ரீகாந்த், “தீபக் சாஹரை எப்படி பதினோரு பேர் கொண்ட அணியில் விளையாட வைக்கிறீர்கள் என்றே எனக்குப் புரியவில்லை. அவரை எப்படி தக்கவைத்துக் கொண்டார்கள்? மீண்டும் முதல் ஓவரிலேயே 20 ரன்களுக்கு மேல் கொடுத்தார். அவரும் தாக்கூரும் சேர்ந்து 5.2 ஓவர்களில் 87 ரன்களைக் கொடுத்தனர். இரண்டு முக்கியமான பந்துவீச்சாளர்கள் இப்படிப் பந்துவீசும்போது ஒரு முக்கியமான போட்டியில் எப்படி வெற்றிபெற முடியும்?”

“இந்த இருவரையும் எப்படி பதினோரு பேர் கொண்ட அணியில் விளையாட வைக்கிறீர்கள்? மும்பை இந்தியன்ஸ் இவர்களை வீட்டுக்கு அனுப்பி பணம் கொடுத்து, 'இனிமேல் விளையாட வர வேண்டாம், தேவைப்பட்டால் அழைப்போம்’ என்று சொல்ல வேண்டும். இதைச் செய்வதில் எந்தத் தவறும் இல்லை” என ஸ்ரீகாந்த் மிகக் கடுமையாகக் கூறினார்.
இந்த சீசனில் தீபக் சாஹர் 3 போட்டிகளில் ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்தி, சராசரி 87 மற்றும் 13 ரன்களுக்கு மேல் எக்கனாமிஸ் என மோசமாக உள்ளார். மறுபுறம், ஷர்துல் தாக்கூர் 6 விக்கெட்டுகள் எடுத்திருந்தாலும், அவரது எக்கனாமி விகிதம் 13.57 ஆக மிக மோசமாக உள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ஜஸ்பிரித் பும்ராவிற்கு அவசரமாக ஓய்வு தேவை என ஸ்ரீகாந்த் வலியுறுத்தியுள்ளார். நடப்பு ஐபிஎல் 2026 சீசனின் முதல் ஐந்து போட்டிகளில் விக்கெட் எதுவும் எடுக்காமல், ஓவருக்கு 8.63 ரன்கள் கொடுத்துள்ளார். பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் நான்கு ஓவர்களில் 41 ரன்கள் கொடுத்து விக்கெட் எடுக்காதது அவரது மோசமான ஆட்டமாகும்.
“ஐந்து போட்டிகளாக பும்ரா விக்கெட் எடுக்கவில்லை. இன்று ரன்களையும் வாரி வழங்கினார். அவருக்கு மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் ஒரு ஓய்வு அவசியம். அவர் விளையாடும் ஒவ்வொரு அணியும் அவரை ஒற்றை ஆளாக நம்பியுள்ளது. டி20 உலகக் கோப்பையில் தனது நாட்டிற்காக கடுமையாக உழைத்து, தொடர் நாயகன் விருதுக்கான போட்டியிலும் இருந்தார்” என்று குறிப்பிட்டார்.
“பும்ராவுக்கு பணிச்சுமை அதிகம். அவர் மிகவும் சோர்வாக இருக்கிறார். அவருக்கு ஒரு முழுமையான ஓய்வு தேவை. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான பெரிய போட்டிக்கு முன் அவருக்கு ஓய்வு அளிக்க வேண்டும். ஆனால், அவர்களின் தற்போதைய நிலையைப் பார்த்தால், பும்ராவுக்கு இப்போது ஓய்வு கொடுக்க முடியுமா? முடியாது. அவர்களிடம் மாற்று பந்துவீச்சாளர்கள் இல்லை” என்று ஸ்ரீகாந்த் வருத்தம் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications