IPL 2026: க்ருனால் பாண்டியா காலரைப் பிடித்த பூரன்.. ஓடி வந்த லக்னோ கோச்.. என்ன நடந்தது?
லக்னோ: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் போட்டியில் நிக்கோலஸ் பூரன் மற்றும் க்ருனால் பாண்டியா இடையே கடுமையான மோதல் எழுந்தது. ஒருகட்டத்தில் பூரன், க்ருனால் பாண்டியாவின் காலரைப் பிடித்தது அங்கிருந்தவர்களை உறைந்து போகச் செய்தது. இந்த நிலையில், பிசிசிஐ இந்த சம்பவத்தின் மீது நடவடிக்கை எடுக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
லக்னோ இன்னிங்ஸின் 10-வது ஓவரில் இந்தச் சம்பவம் நடந்தது. பெங்களூரு அணிக்காகப் பந்துவீசிய க்ருனால் பாண்டியா, லக்னோ வீரர் நிக்கோலஸ் பூரனை நோக்கி ஆக்ரோஷமாக ஏதோ கூறினார். "உன்னால் 6 மீட்டர் தூரத்திற்கு மேல் சிக்ஸர் அடிக்க முடியுமா?" என்பது போல அவர் கிண்டல் செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பூரன், பேட்டைத் தூக்கிக்கொண்டு பாண்டியாவை நோக்கி நேருக்கு நேர் மோதச் சென்றார். மைதானத்தில் பதற்றம் நிலவியது.

ஆட்டம் முடிந்த பிறகு, பூரன் பாண்டியாவின் காலரைப் பிடித்து இழுப்பது போன்றும், லக்னோ அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் தலையிட்டு அவர்களை பிரித்து விடும் காட்சிகள் இடம் பெற்ற வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அது பழைய நண்பர்களுக்கு இடையேயான ஜாலியான கிண்டல் என்று கூறப்பட்டாலும், ஐபிஎல் ஒழுங்கு நடவடிக்கைக் குழு இதனை ஆய்வு செய்து வருகிறது.
மழையினால் இரண்டு முறை இந்த ஆட்டம் தடைப்பட்டதால், போட்டி 19 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. முதலில் ஆடிய லக்னோ அணியில் மிட்செல் மார்ஷ் ருத்ரதாண்டவம் ஆடினார். 56 பந்துகளில் 9 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 111 ரன்கள் குவித்து அசத்தினார். கேப்டன் ரிஷப் பண்ட் கடைசி நேரத்தில் 10 பந்துகளில் 32 ரன்கள் விளாச, லக்னோ அணி 209 ரன்களைக் குவித்தது.
டக்வொர்த் லூயிஸ் முறைப்படி பெங்களூரு அணிக்கு 213 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. நட்சத்திர வீரர் விராட் கோலி ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். கேப்டன் ரஜத் படிதார் 61 ரன்களும், டிம் டேவிட் 40 ரன்களும் எடுத்துப் போராடினர். இருப்பினும், லக்னோவின் இளம் வீரர் பிரின்ஸ் யாதவ் 3 விக்கெட்டுகளைச் சாய்த்து பெங்களூருவின் வெற்றியைத் தடுத்தார். இறுதியில் பெங்களூரு 203 ரன்கள் மட்டுமே எடுத்து, 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.


Click it and Unblock the Notifications
