IPL 2026: இது தெரியவில்லை என்றால், ஐபிஎல் விளையாட தகுதியே கிடையாது.. PBKS-ஐ சாடிய பத்ரிநாத்
மும்பை: நடப்பு ஐபிஎல் 2026 தொடரில் பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணியின் ஃபில்டிங் குறித்து முன்னாள் வீரர் சுப்ரமணியம் பத்ரிநாத் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். தோல்விப் பயணத்தில் பல கேட்சுகள் தவறவிடப்பட்ட நிலையில், இச்சறுக்கல்களுக்கு தொழில்நுட்பமோ, பயிற்சியோ காரணமல்ல; அழுத்தத்தைச் சமாளிக்கும் திறமையின்மையே காரணம் என்றார். கடந்த சீசனில் ரன்னர்-அப் ஆனாலும், ஆறு வெற்றிகளுடன் தொடங்கிய PBKS, பிளேஆஃப் சுற்றுக்குத் தற்போது போராடி வருகிறது.
PBKS-ன் ஃபில்டிங் குறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சியில் பேசிய பத்ரிநாத் "தகுதி பெற ஒன்று அல்லது இரண்டு ஆட்டங்கள் மட்டுமே உள்ளன என்று சிந்திக்கும்போது, கவனம் பந்தில் இருந்து முடிவின் மீது திசைமாறும். அங்கிருந்துதான் அழுத்தம் பிறக்கிறது. இது தொழில்நுட்பம் அல்லது பயிற்சியின் குறைபாடு இல்லை. அழுத்தம் தான் விளையாட்டு. அதைக் கையாள முடியாவிட்டால், ஐபிஎல்லில் விளையாடக் கூடாது," என்று தெரிவித்தார்.

"மூன்று அல்லது நான்கு போட்டிகளில் கிட்டத்தட்ட 20 கேட்சுகளைத் தவறவிட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை ஒரு முழு சீசனுக்குமே அதிகம். ரிக்கி பாண்டிங் போன்ற பயிற்சியாளர்களால் சரிசெய்ய முடியாது. 90% மிக எளிதான கேட்சுகள். இந்த மட்டத்தில் இத்தகையவற்றை நிச்சயம் பிடிக்க வேண்டும்," என்று வலியுறுத்தினார்.
11 ஆட்டங்களில் 12 புள்ளிகள் பெற்றுள்ள PBKS, பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதிபெற, எஞ்சியிருக்கும் மூன்று லீக் போட்டிகளில் குறைந்தபட்சம் இரண்டில் வெற்றி பெற வேண்டும். PBKS தொடக்க ஆட்டக்காரர்களான பிரியான்ஷ் ஆர்யா மற்றும் பிரப்சிம்ரன் சிங் ஆகியோரின் சமீபத்திய தடுமாற்றங்கள் குறித்துப் பேசிய பத்ரிநாத், "அவர்களின் ஆக்ரோஷமான பேட்டிங் அணுகுமுறை சில தோல்விகளுக்கு வழிவகுக்கும்" என்றார்.
"பிரியான்ஷ் ஆரியாவின் ஸ்ட்ரைக் ரேட் 300 ஆகவும், பிரப்சிம்ரனின் ஸ்ட்ரைக் ரேட் 200 முதல் 250 ஆகவும் உள்ளது. இத்தகைய அதிரடி ஆட்டம் அபாயங்களையும், செயல்திறனில் ஏற்ற இறக்கங்களையும் உள்ளடக்கும். ஒரு கட்டத்தில் சரிவு எதிர்பார்க்கப்பட்டது. அது நிகழும்போது, அவர்களின் ஆட்டத்திறன் குறித்து அனைவரும் கேள்வி எழுப்புவார்கள்."
இந்தச் சரிவு இருந்தாலும், ஐபிஎல் 2026 தொடரில் ஆர்யா மற்றும் பிரப்சிம்ரன் இருவரும் ஒட்டுமொத்தமாகச் சிறந்த புள்ளிவிவரங்களைப் பதிவு செய்துள்ளனர். முறையே 34.20 மற்றும் 42.44 சராசரியுடனும், 226.49 மற்றும் 169.02 ஸ்ட்ரைக் ரேட்டுடனும் சிறப்பாகச் செயல்பட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications

